
தமிழ்நாட்டில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, 97.37 இலட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 இலட்சம் பேர் என்றும், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 இலட்சம் பேர் என்றும், ஒன்றுக்குமேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 இலட்சம் பேர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இவற்றில், சென்னையில் மட்டும் 14 இலட்சத்துக்கு மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதனால் சென்னையில் கடந்த 2 நாட்களாக திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் நீக்கம் தொடர்பாக ஆட்சேபனை மனுக்களை வழங்கி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதன்படி, 19, 20 ஆகிய தேதிகளில் மட்டும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில் 2 இலட்சத்து 48,294 ஆட்சேபனை மனுக்கள்மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திமுக சார்பில் 65 ஆயிரம் மனுக்கள், அதிமுக சார்பில் 63 ஆயிரம் மனுக்கள், பாஜக சார்பில் 54 ஆயிரம் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி 39,821 மனுக்களும், பெயர் நீக்கம் தொடர்பாக 413 மனுக்களும் வந்துள்ளன. இந்த திருத்தப்பணி சனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் பிப்ரவரி மாதம் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இப்படி இலட்சக்கணக்கில் புகார் மனுக்கள் வந்துள்ளது இந்தத் திருத்தப்பணியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.


