புதிய சட்டம் நன்று, பழி வாங்கப் பயன்படுத்தாதீர் – பாராளுமன்றத்தில் சத்யபாமா உரை

ஆட்கள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) குறித்த 2018 ஆம் ஆண்டின் மசோதா குறிப்பாக பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட நபர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது, அவ்வாறு கடத்தப்பட்டவர்களை மீட்பது மற்றும் மறுவாழ்வளிப்பது குறித்து மக்களவையில் இன்று 26.07.2018 திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா பேசினார்.

அவருடைய உரையில்….

ஆள்கடத்தலுக்கு எதிராக நாட்டிலேயே முதன்முறையாக ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ள மாண்புமிகு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆள் கடத்தல் குறித்த வழக்குகளை விசாரிக்கவும் இந்த மசோதாவின் அம்சங்களை அமல்படுத்தவும் தேசிய ஆள்கடத்தலுக்கு எதிரான அமைப்பு உருவாக இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த அமைப்பில் காவல்துறை அதிகாரிகளும் இதர அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். மேலும் இந்த அமைப்பு வழக்கு விசாரணை தொடர்பாக மாநில அரசின் ஒத்துழைப்பை நாடும் என்பதோடு ஒரு மாநிலத்துடன் தொடர்புடைய வழக்கை விசாரணை மற்றும் வழக்கு தொடுப்பதற்காக அம்மாநிலத்துக்கு மாற்றவும் கோரும். கடத்தல் நடப்பதாக அறியப்பட்ட வழிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி ஒருங்கிணைக்கவும், தடுப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சட்ட அமலாக்க துறைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், மற்றும் இதர தொடர்புடைய மக்களுடன் ஒருங்கிணைப்பை பலப்படுத்தவும். பிற நாடுகளில் உள்ள நிர்வாகத்தினருடன் உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிப்பது. பரஸ்பரம் சட்ட உதவி வழங்குவது ஆகியன இந்த அமைப்பின் முக்கிய பணிகளாக இருக்கும்.

இந்த மசோதாவில் மாநில ஆள்கடத்தலுக்கு எதிராக மாநில அமைப்பை உருவாக்கும் மாநில அரசு மாநில அளவில் ஒரு அதிகாரியையும் பிரத்யேகமாக நியமனம் செய்யும்.

ஆள் கடத்தல் தடுப்பு குழுக்கள் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அமைக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. தேசிய மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் ஆள் கடத்தலுக்கு எதிரான நிவாரண மற்றும் மறுவாழ்வுக் குழுக்களையும் அமைக்க இந்த மசோதா உறுதியளிக்கிறது.

ஆபத்து இருப்பதாக அறிய நேர்ந்தால் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி அவ்வாறு கடத்தப்பட்டவர்களை மீட்க முடியும்.

அவ்வாறு மீட்கப்பட்ட நபர்கள் ஒரு நீதிபதி அல்லது குழந்தைகள் நலக் குழுவின் முன் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்படுவார்கள். மாவட்ட அளவில் அமைக்கப்படும் கடத்தல் தடுப்புக் குழு மீட்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும்.

மத்திய மாநில அரசுகள் மறுவாழ்வு இல்லங்களை அமைக்கவும், இந்த மசோதா வகை செய்யும். இருக்க இடம், உணவு, ஆலோசனை, மருத்துவ சேவைகள் ஆகியவற்றை இந்த இல்லங்கள் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கும்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மறுவாழ்வு இல்லங்களை பாதிக்கப்பட்டோருக்கு நீண்ட கால மறுவாழ்வுப்பணிகளை தொடர மத்திய அல்லது மாநில அரசுகள் முயலும். கடத்தல் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளின் முடிவுக்கும் கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு மறுவாழ்வு நிதியத்தை மத்திய அரசு அமைத்து அதனை இத்தகைய பாதுகாப்பு மற்று மறுவாழ்வு மையங்களை அமைப்பதற்காக பயன்படுத்தும்.

ஆள்கடத்தல் குறித்த பிரத்யேக வழக்குகளை விசாரித்து ஒரு ஆண்டுகாலத்துக்குள் தீர்ப்பு வழங்கும் வகையில் பிரத்யேக நீதிமன்றங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கவும் மசோதா வகை செய்கிறது. ஆட்களை கடத்துவது, ஆள்கடத்தலை ஊக்குவிப்பது, பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிடுவது, கடத்தி கொத்தடிமைகளாக வைத்திருப்பது, பிச்சை எடுக்க வைப்பது என ஆள் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்றும் இந்த மசோதா வரையறுக்கிறது.

உதாரணமாக மிக மோசமான ஆள்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தொடங்கி ஆயுள் தண்டனை வரையிலும், விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபரை கடத்த ஏதுவாக எந்தத் தகவலையும் பதிப்பிக்கும் நபருக்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மசோதாவின் அம்சங்கள் குறித்து அரசு எச்சரிக்கையுடன் கவனம் செலுத்தி சட்டமாக்கப்பட்ட பிறகு அவை தவறாகவோ, தனிநபர் முன்விரோதம் காரணமாக பழி தீர்க்கும் நடவடிக்கையாகவோ பயன்படுத்த வழிவகையாக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று நான் எனது உரையை நிறைவு செய்யும் முன் கேட்டுக்கொள்கிறேன்,
நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response