துனிசியாவை கடைசி நேரத்தில் துவைத்த இங்கிலாந்து

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில், ஜூன் 18 இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 12வது தரவரிசையில் இருக்கும் இங்கிலாந்து அணி, 21வது தரவரிசையிலுள்ள துனிசியாவை (பிரிவு ஜி) எதிர்கொண்டது.

ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் இரவு 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி) ரஷ்யாவில் தொடங்கியது. போட்டி ஆரம்பித்த 11வது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கெய்ன் கோல் அடித்து மைதானத்தை மிரள வைத்தார்.

இதன் மூலமாக ஆட்டத்தில் முன்னிலை பெற்று விளங்கிய இங்கிலாந்து அணியை பழி தீர்க்கும் வகையில் துனிசியா நாட்டு வீரர்கள் முனைப்புடன் செயல்பட்டனர். அது போலவே ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் துனிசியா நாட்டு வீரர் ஃபெர்ஜானி சஸ்ஷி, கோல் அடித்து இங்கிலாந்து வீரர்களை பழி தீர்த்து கொண்டார்.

பிறகு, இரு அணி வீரர்களும் தங்களது அணியை வெற்றி பெறும் நோக்கில் மல்லுக்கட்ட மைதானமே அலறியது. இந்நிலையில் போட்டி ‘டிரா’வில் முடிவடையும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இங்கிலாந்து வீரர் ஹாரி கெய்ன் மற்றொரு அசத்தலான கோல் அடித்து இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகமூட்டினார்.

களிப்பில் திகைத்த இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Leave a Response