முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் – பிரதமர் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி

கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் அங்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மக்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை எனவும், வீட்டில் இருந்தே பணியாற்றத் தேவையில்லை, இரவு நேர விடுதிகள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு அவசியமாக்கப்பட்டிருந்த கோவிட் பாஸ்கள் இனி தேவையில்லை, அதே போல கட்டாய தடுப்பூசி சான்றிதழ்களும் இனி தேவைப்படாது என போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது, “கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படும். பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதன் பலனாக இது சாத்தியமாகி இருக்கிறது. இதுவரை 36 மில்லியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட 90 சதவிகிதம் பேருக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சாதனை அளவில் சென்றுகொண்டிருந்த தினசரி கொரோனா பாதிப்புகளும் தற்போது குறையத் துவங்கியுள்ளன.

ஓமைக்ரான் அலை தற்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக நமது விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்று நமக்குத் தெரிந்த அனைத்து எச்சரிக்கையான நடவடிக்கைகளையும் நாடு முழுவதும் உள்ள அனைவரையும் தொடருமாறு நான் ஊக்குவிக்கிறேன்.

நம்முடைய சமூகத்தில் பெரும்பாலானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதால், இங்கிலாந்து ‘பிளான் பி’-ல் இருந்து மீண்டும் ‘பிளான் ஏ’-வுக்கு அடுத்த வார வியாழன் முதல் திரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மூன்று நாட்களுக்கு முன்புகூட, அதாவது சனவரி 18 அன்று, இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 94,432 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,99,300 ஆக உயர்ந்துள்ளது என்று செய்திகள் வந்தன.

இரண்டே நாட்களில் அதற்கு நேர்மாறான முடிவை பிரதமர் அறிவித்திருக்கிறார்.

பிரதமர் இல்லத்தில் ஊரடங்கு நேரத்தில் விதிமீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய விவகாரத்தில் சிக்கிய போரிஸ் ஜான்சன் பதவியை இழக்கக் கூடும் என கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் இருந்து தப்பவே போரிஸ் ஜான்சன் கொரோனா விதிமுறைகளை நீக்கியிருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

எது எப்படியிருப்பினும் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டிருப்பது உலக மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது.

Leave a Response