காலா படத்தை வெகுமக்கள் ரசிக்கவில்லை, ஏன்?

காலா படம் பார்த்த அனுபவத்தில் ரஞ்சித் அபிமானம், ரஜினி வெறுப்பை வென்றது.காட்சியமைப்புகளில், நிகழ்வுகளில் பல சுவாரசியமான அம்சங்களை படத்தில் நிரவியுள்ளார். என்னைப் போன்ற, ஏற்கனவே கொள்கை, கலை எல்லாம் பரிச்சயமானவர்களுக்குப் பிடிக்கும்; ரசிக்கவும் முடியும்.

ஆனால் இதுபோன்ற வெகுஜன படங்களை மக்கள் ரசித்துப் பார்த்தால்தான் பலன் கிடைக்கும். அது ஏன் நிகழவில்லை என்பதை ரஞ்சித்தும், பிறரும் அவசியம் யோசிக்க வேண்டும். இதில் சுட்டப்படும் அரசியல் மக்கள் மனதில் பதிய வேண்டும் என்றால் திரைக்கதை இன்னம் நிறைய மெனக்கட வேண்டும். உணர்வு ரீதியாக மக்களை தீண்டுவது சுலபமல்ல.

என்னைப்பொறுத்தவரை என்றாவது ஒருநாள் வெகுஜன கதையாடலின் ஆழ்ந்த தத்துவார்த்த அம்சங்களை விளக்க நூல் எழுதும்போது ”காலா”- வின் திரைக்கதை பலவீனங்கள் உதவி செய்யும். என் பார்வையில் திரைக்கதை பலவீனங்களை பட்டியலிடப் புகுந்தால் எண்ணிலடங்காமல் நீண்டுவிடும்.

சீன்களை உருவாக்குவது வேறு, திரைக்கதையின் உள்ளோட்டங்களை செறிவாக்குவது வேறு. உதாரணத்திற்கு சொல்வதானால் ஹியூமா கியுரேஷி ஃபிளாஷ்பேக் சுத்தமாக ஒட்டவில்லை. ரஜினியை கையாள்வதிலேயே முழு முனைப்பையும் காட்டியதால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.

ரஜினி என்ற சுமையை இறக்கிவிட்டு, ரஞ்சித் சுதந்திரமாக படம் செய்தால் இன்னம் நிறையவே சாதிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. வெகுஜன கதையாடலாகவும் செய்யலாம், குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கான படமாகவும் செய்யலாம். சமூக மாற்றத்திற்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை.

– ராஜன்குறை

Leave a Response