18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தீர்ப்பு – தமிழக அரசுக்கு சாதகம்

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 எம்எல்ஏ-க்களின் தொகுதியை காலியாக அறிவித்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் எழுத்துபூர்வமான இறுதி வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேசமயம் வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான சுந்தர் சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்படும்.

எனவே இன்னும் சில மாதங்களுக்கு தமிழக அரசுக்கு ஆபத்து இல்லை.

Leave a Response