திருப்பூரின் 4 அத்தியாவசியத் தேவைகள் – மத்திய அமைச்சரிடம் எடுத்துச் சொன்ன சத்யபாமா எம்.பி

திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிஷன் பால் குர்ஜரிடம் 14.06.2018 நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில்…

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏடிஐபி திட்டத்தின் கீழ் குறைபாடுகள் கொண்ட நபர்களுக்கான உதவி திட்டத்தை வழங்க ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாட்டுக் கூட்டத்திற்கு இன்று திருப்பூர் வருகை தந்துள்ள மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் நலத்துறை இணை அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் திருப்பூர் நகரம் என்பது மிகச்சிறந்த வியாபார தளமாகும். இங்கு ஆண்டுக்கு சுமார் ரூ.30ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் உள்நாட்டு உற்பத்தியும் ரூ.12 ஆயிரம் கோடியளவிற்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதைத்தவிர நகரத்தில் இருக்கும் 60 சதவீதத்திற்கும் மேலான மக்கள் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.

அதனால் நகர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் அவர்கள் திருப்பூர் நகரத்திற்கு என ஒரு நிரந்தர உள்கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

இதில் குறிப்பாக நான்கு அத்தியாவசியத் தேவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அவை…

1)திருப்பூர் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் ஊனமுற்றவர்களுக்கு என ஒரு சிறப்பு முகாமை மாதந்தோறும் மாவட்டம் முழுவதும் நடத்துவதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

2)திருப்பூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கவனிப்பிற்கு என சிறப்பு சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்தி, அதற்கான பொருளாதார உதவிகளை வழங்கி உதவிட வேண்டும். இது மத்திய அரசின் ஷாக்‌ஷம்/SAKSHIM திட்டத்தின் கீழ் இயங்குமாறு அமைத்திட வேண்டும்.

3)ஊனமுற்ற மக்களுக்கு என யுடிஐட/UDID என்ற சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவ கார்டு (அட்டை) வழங்கிட வேண்டும்.

4)முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுவது என்னெவென்றால், “குழந்தைகள்” பிறக்கும் போதே செவித்திறன் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ளும் விதமாக அதற்கான ஆய்வு மையம் அதிக மக்கள் வசிக்கக்கூடிய இந்த திருப்பூர் நகரில் இல்லாத காரணத்தினால் குழந்தை பிறந்து சுமார் 2 வயது கடந்த பிறகு தான் அதுகுறித்த பிரச்சனை பெற்றோர்களுக்கு தெரியவருகிறது. அதனால் இந்த பாதிப்பை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக “அலி யவார் ஜங்” தேசிய மையத்தின் பிராந்திய மையம் ஒன்றை திருப்பூர் நகரில் அமைத்து பிறந்த குழந்தைகளின் பேச்சு மற்றும் கேட்டல் குறைபாடுகளை நீக்கும் விதமாக உதவிட வேண்டும்

இவ்வாறு மத்திய அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அதுகுறித்து பரிசீலனை செய்து விரைவில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பதிலை தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார் என திருப்பூர் எம்.பி.சத்தியபாமா கூறினார்.

Leave a Response