அடித்தவனைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கிறார்கள் – ஈரோட்டில் கொதிப்பு

தமிழ்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீதும் மற்றும் அவருடன் சென்ற சீனு என்பவர் மீதும் கடந்த 10ஆம்தேதி தஞ்சை காவேரி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் மணியரசன் படுகாயம் அடைந்த நிலையில் தஞ்சை வினோதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

அவர் தாக்கப்பட்டதைக்
கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இன்று ஈரோட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்னெடுப்பில் அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முறையான அனுமதியும் பெற்று அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

நிகழ்வுக்கானஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு என்று ஒரு சொத்தையான காரணத்தைச் சொல்லி அனுமதி மறுத்துள்ளார்கள்.

இந்த அனுமதி மறுப்பானது தமிழ்த்தேசியப் பேரியக்க பொறுப்பாளர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சியை சார்ந்தவர்களுக்கும் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் நீண்ட தமிழ்த்தேசியப் போராளி ஒரு பேரியக்கத்தின் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற அடையாள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதி மறுக்கப்படுகிறது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லக்ககூடாது என்பதற்காகவே இந்தத் தடை என்கிறார்கள்.

Leave a Response