விஸ்வரூபம் எனும் இந்துத்துவ பூதம் வருகிறது வழிவிடுங்கள் காலா

நேற்று காலா பார்த்தேன். ஸ்ரீராம் மட்டும் பக்கத்தில் இருந்திராவிட்டால் அரை மணி நேரத்திலேயே எழுந்து வந்திருப்பேன். முதல் ஒரு மணி நேரம் தமிழ் டிவி சீரியலைப் போலவே இருந்தது. ரஞ்சித் பாவம் சின்ன பையர். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இப்படியா ஓப்பனிங் சீன் வைப்பார்? பொடிப்பசங்களோடு சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் ஆடுகிறார். முதல் பந்திலேயே க்ளீன் போல்ட். இதுக்கு ஏன் ஐயா சூப்பர் ஸ்டார்? பேசாமல் ராஜ் கிரணையே நடிக்க வைத்திருக்கலாமே? சூப்பர் ஸ்டார் எதுக்கு? படம் பூராவுமே எனக்கு ராஜ் கிரண் படம் மாதிரிதான் இருந்தது.

சமகாலத் தமிழ் நடிகர்களில் எனக்கு ஆகப் பிடித்தவர் ரஜினிகாந்த். நடிப்பு என்றால் கமல் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் கமலை விட ரஜினி மிகப் பிரமாதமான நடிகர். அவர் திரையில் தோன்றினாலே நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு தோன்றும். இந்த அளவு screen presence நிறைந்த நடிகர் இந்தியாவிலேயே யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் விரல் அசைந்தால் அது நம் மனதை காந்தம் போட்டு இழுக்கிறது. அதனால்தான் அத்தனை குழந்தைகளுக்கும் அவரைப் பிடிக்கிறது. ஜப்பானில் கூட அவர் படங்களை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். இது அவருக்குக் கிடைத்துள்ள வரம்.

நடிப்பு பற்றி பாடம் எடுக்கக் கூடிய என் நண்பர் ஒருவரிடம் இந்தக் கருத்தை நான் சொல்லிக் கொண்டிருந்த போது நண்பர் அதை ஆமோதித்தார். பிறகு அவர் ஒரு உதாரணம் சொன்னார். ஒரு நிகழ்வைப் பார்க்கும் போது கமல் ரஜினி இருவரின் முகபாவம் எப்படி இருக்கும் என்பதை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். நிகழ்வு இதுதான்: ஒரு பெண்ணின் மேலாடை கீழே விழுந்து விடுகிறது. அதை இருவரும் பார்க்க நேர்கிறது. நடிப்புதான். இப்போது அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், கமலின் கண்களில் காமம் தெரியும்; ரஜினியின் கண்களில் கருணை தெரியும். இதுதான் உச்ச நடிப்பு. படுக்கை அறைக் காட்சியில் தான் காமம் தெரிய வேண்டும். மேற்குறிப்பிட்ட காட்சியில் கருணைதான் தெரிய வேண்டும். இப்படி சிவாஜிக்குப் பிறகு ஓர் உன்னதமான நடிகர் என்றால் அது ரஜினிதான். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார். ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரை ஒரு ராஜ் கிரண் ரேஞ்சுக்கு ஆக்கியிருக்கிறாரே, ரஞ்சித்? படத்தைப் பற்றி பலரும் புகழ்ந்து எழுதியிருந்ததைப் பார்த்து விட்டு நான் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் தான் போனேன். படம் பூராவுமே ரஜினி குழந்தைகளோடு அமர்ந்து அம்புலி மாமா கதைதான் பேசிக் கொண்டிருக்கிறார். நமக்கோ தலைவேதனையாய் இருக்கிறது. காட்சி அமைப்புகளில் எந்தப் புதுமையும் relief-உம் இல்லை. அடிக்கடி தாராவியை பறவை பார்ப்பது போல் மேலே இருந்து காண்பிக்கிறார் ஒளிப்பதிவாளர். அது ஒரு தலைவேதனை.

படத்தில் குறியீடு அது இது என்று பலரும் எழுதியிருந்தனர். ஒரு குறியீடு எழவும் இல்லை. வில்லன் ராமனாகவும் நாயகன் ராவணனாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இது எம்.ஆர். ராதா காலத்திலிருந்து வரும் குறியீடு. நெற்றியில் பட்டையைப் போட்டுக் கொண்டு தப்பு செய்வார் வில்லன். நம்பியாரும் இதை நிறைய செய்திருக்கிறார். ராவணன் தான் தலித்துகளின் குறியீடா? அடுத்தவன் பெண்டாட்டியை அபகரிக்கும் காரியத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதுமே செய்ய மாட்டார்கள். அதெல்லாம் மேட்டுக்குடி வர்க்கத்தின் பொழுதுபோக்குகளில் ஒன்று. காலாவின் மகன் பெயர் லெனின். தரகு முதலாளிகள் மற்றும் என்.ஜி.ஓ.க்களின் பின்னே ஓடுபவனாக வருகிறான் அவன். அவன் பெயர் லெனின். கம்யூனிஸ்டுகளின் மேல் ரஞ்சித்துக்கு என்ன கோபமோ!

ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் பெண்மணி நடிப்பில் சுனாமியாக அடித்திருக்கிறார் என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்த அம்மாள் மேடை நாடக நடிகர் போலும். ஒரே ஓவர் ஆக்டிங் மற்றும் கத்தல். சகிக்கவில்லை. நானா படேகர் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று வேறு பலரும் எழுதியிருந்தார்கள். பார்த்தால் அவர் பாட்டுக்கு பூனை போல் வந்து பூனை போல் போய்ச் சேர்கிறார். வில்லன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? பாட்ஷா ரகுவரன். காதலன் ரகுவரன். வெற்றி விழா சலீம் கௌஸ். இந்தப் படத்தில் நானா படேகர் வெறும் கௌரவ நடிகர்.

ரஜினியின் பழைய காதலியாக வரும் பாத்திரம் படு முட்டாள்த்தனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆஃப்ரிக்கா, ப்ரஸீல் போன்ற நாடுகளில் எல்லாம் ஒடுக்கப்பட்ட, சேரி வாழ் மக்களுக்காகப் போராடிய பெண்ணுக்கு இங்கே தாராவியில் நல்லவன் யார் கெட்டவன் யார் என்று தெரியவில்லையாம். வில்லன் நானா படேகரோடு சேர்ந்து ‘சேவை’ செய்ய நினைக்கிறார். நம் உள்ளூர் லெனின் வேறு துணை!

பாடல்கள் படு தண்டம். இசை மகா மட்டம். எனக்கு சந்தோஷ் நாராயணன் என்றால் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்தை அவர் ஏதோ உலகப் போர் சம்பந்தப்பட்ட படம் என்று நினைத்து விட்டார் போல. ரஜினி நேர்ப்பேச்சுகளில் போர் வரும் போர் வரும் என்கிறாரா, அதை நினைத்து இசை அமைத்து விட்டார் என்று நினைக்கிறேன். ரஜினி போர் என்று சொல்வது நம்முடைய பஞ்சாயத்துத் தேர்தலைத்தான் சந்தோஷ். அடுத்த முறை கவனமாக இருங்கள். மட்டுமல்லாமல், ரஜினியும் அவர் மனைவியும் பாடும் டூயட்டைக் (வாடி என் தங்க செல) கேட்கும் போது வாந்தி வருவது போல் இருந்தது. அவ்வளவு அசட்டுத்தனம்.

பெரும்பாலான நம் இயக்குனர்களுக்கு – அதிலும் இளம் இயக்குனர்களுக்கு – மனித உணர்வுகள் பற்றியே ஒரு வெங்காயமும் தெரியவில்லை. ரஜினியின் மனைவியையும் மகனையும் கொன்று விட்டான் வில்லன். நம் சூப்பர் ஸ்டார் என்ன செய்கிறார் தெரியுமா? நேராக வில்லன் வீட்டுக்குச் சென்று கொஞ்சம் டயலாக் பேசி விட்டு தண்ணீர் குடித்து விட்டு வருகிறார். விளங்குமா தமிழ் சினிமா? நமக்கு இப்படி நடந்தால் நம் மனம் என்ன பாடு படும் என்று ஒரு இயக்குனர் யோசிக்க வேண்டாமா? தம்பி, லிங்குசாமி இயக்கிய ரன் படத்தையே நீங்கள் பத்து இருபது முறை பாருங்கள். மாதவனின் முகம் மைலாப்பூர் அம்பி மாதிரி முகம். அந்த முகத்தையே லிங்குசாமி எப்படிப் பயன்படுத்தியிருப்பார்? அதுல் குல்கர்னியின் நடிப்பு அதில் எப்படி? எல்லோரும் சாப்பிடும் காட்சி ஞாபகம் இருக்கா? துரோகம் செய்தவன் எப்படி அந்த இடத்திலேயே ஒன்னுக்குப் போவான்? காட்சி என்றால் அப்படி இருக்க வேண்டும்.

தம்பி ரஞ்சித், நீங்கள் சினிமா படம் எடுக்க வேண்டுமென்றால் தலித் இலக்கியம் எல்லாம் படித்துப் பயன் இல்லை. லிங்குசாமி என்ன தலித் இலக்கியம் படித்து விட்டா ரன் எடுத்தார்? அல்லது, கில்லி எடுத்த தரணிதான் தலித் இலக்கியம் படித்தாரா? உங்கள் நோக்கம் என்ன? ஜெயமோகன் மாதிரி வெள்ளை யானை போன்ற தலித் இலக்கியம் படைப்பதா, அல்லது சினிமாவா? சினிமா என்றால் முதலில் நாடோடி மன்னன், படகோட்டி, புதிய பறவை, துப்பாக்கி, ரன், தூள், கில்லி போன்ற படங்களைப் பார்த்து விட்டு ஆரம்பியுங்கள். ஏன், உங்களுடைய மெட்றாஸ் படத்தையே தினம் ஒருமுறை பாருங்களேன்?

ஒன்று சொல்லுங்கள். நீங்கள் பொழுதுபோக்குப் படம் எடுக்க விரும்புகிறீர்களா? அல்லது, தலித் அரசியலை எல்லாம் குறியீடாக வைத்துப் படம் எடுக்க வேண்டுமா? அதாவது, சீரியஸ் படம்? முதல் வகை என்றால் அது உங்களுக்கு வரவே இல்லை. கபாலியும் கோய்ந்தா. காலா கோய்ந்தா கோய்ந்தா… சீரியஸ் வகை படம் என்றால், அதுவும் ரஜினியை வைத்தே எடுக்க வேண்டும் என்றால், தயவுசெய்து அமிதாப் நடித்த Last Lear என்ற படத்தைப் பாருங்கள். ரிதுபர்ணோ கோஷ் இயக்கியது. தன் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்தார் அமிதாப். அமிதாபின் வாழ்வில் அது career best. ரஜினியை வைத்து அப்படி ஒரு படம் செய்யுங்கள். காட்ஃபாதர் இருக்கிறதே, அதை விடவா ஒரு உதாரணம் வேண்டும்? சீரியஸான படம்; அதே சமயம், பக்கா பொழுதுபோக்கு.

ரஞ்சித், உங்களை அறிந்த ஒரு நண்பனாகக் கேட்கிறேன். ஒருவனின் உயிருக்குயிரான மனைவியையும் மகனையும் ஒருத்தன் போட்டுத் தள்ளி விட்டால் அந்த மனிதனின் மனநிலை எப்படி இருக்கும்? ஒரே ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். காட்ஃபாதர் படத்தை மீண்டும் மீண்டும் பாருங்கள். அந்தப் பரீட்சையில் நீங்கள் தேர்வடைந்தால்தான் உங்களால் நல்ல படம் கொடுக்க முடியும்.

பின்குறிப்பு: நேர்வாழ்க்கை ரஜினி பற்றிச் சொல்லாமல் இந்தப் படத்தைப் பற்றி எழுத முடியாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமாவும் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. படத்தில் ரஜினி வில்லனைப் பார்த்து யார் நீங்க என்று கேட்கிறார். நேர் வாழ்வில் ரஜினியை ஒரு சாதாரண குடிமகன் யார் நீங்க என்று கேட்டார். ஏன் என்றால், திரு ரஜினிகாந்த் அவர்களே, புரிந்து கொள்ளுங்கள், நேர் வாழ்வில் நீங்கள் ஹரி தாதாவின் ஊதுகுழல். Reel இல் ஹீரோ. Real –இல் வில்லன். அதனால்தான் சினிமாவில் நீங்கள் வில்லனைப் பார்த்துக் கேட்ட கேள்வியை இங்கே சாமான்யன் உங்களைப் பார்த்து கேட்கிறான். சினிமாவில் போலீஸை அடிக்கிறீர்கள். இங்கே போராளியை அடிக்கிறீர்கள். சினிமாவில் உங்கள் வில்லன் பேசும் அத்தனை வசனத்தையும் வார்த்தை பிசகாமல் இங்கே தூத்துக்குடியில் பேசினீர்கள். மக்கள் புரிந்து கொண்டார்கள். கவலை இல்லை. முகமூடி போட்டுக் கொண்டு விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு இந்துத்துவ பூதம் வருகிறது. அதை கவனிக்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் வழிவிடுங்கள்.

– சாருநிவேதிதா

Leave a Response