
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22 ஆம் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடயே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தச் சூழலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காகக் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விழுப்புரம் காவல்துறையினர் இன்று தூத்துக்குடி சென்று மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவரைக் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி நிகழ்வு நடந்து பல நாட்கள் கழித்து வேல்முருகனை இப்படியா கைது செய்வது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


