ரஜினியை ஏன் இப்படி இம்சை செய்கிறார்கள் – எழுத்தாளர் வேதனை

ரஜினியின் அரசியல் குறித்து எழுத்தாளர் ராஜன்குறையின் கருத்து,,,,,

ரஞ்சித் காலா படத்தின் அரசியல் நிலவுடமை என்கிறார். அதாவது ஏன் பெரும்பான்மை மக்கள் நிலமற்றவர்கள் ஆக்கப்பட்டார்கள் என்பதை அறிய வேண்டும்; அதற்கான கேள்விகளை எழுப்பவேண்டும்; அந்த கேள்விகளை சூப்பர் ஸ்டார் மூலம் கேட்க வைத்தேன் என்கிறார்.

“தலைவர்” ரஜினி ரஞ்சித்தின் அரசியல் உணர்வை பாராட்டுகிறார். ரஞ்சித் தான் மட்டும் முன்னேறாமல் “அவருடைய” சமூகத்தையும் முன்னேற்ற விரும்புகிறார் என்பதையும் குறிப்பிடுகிறார்.

ரஞ்சித்தின் அரசியல் தலித் அரசியல் என்பது தெளிவாக சுட்டப்படுகிறது.

ஆனால் ரஜினி தனக்கு அந்த அரசியலில் எதுவும் ஈடுபாடு இருப்பதாக பேச்சுக்குக்கூட கூற மாட்டேன் என்கிறார். பொதுவாகக் கூட ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட கூற மறுக்கிறார்.

காலா அரசியல் படமல்ல என்கிறார். அதைவிட கொடுமை தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்கிறார். செய்துவிட்டால் செண்டிமெண்டலாக “கண்ணை மூடிவிடலாம்” என்கிறார். நடுத்தர வயதில் தன் மகளைக்காட்டி இவளுக்கு ஒரு வழிகாட்டிவிட்டால் கண்ணை மூடிவிடலாம் என்று ஒருவர் சொல்வதைப்போல. அபத்தம்.

நாடி, நரம்பு, எலும்பு, ரத்தம், சதை, மூளை எதிலும் அரசியல் உணர்வே இல்லாத ஒரு நபரை ஏன் எல்லோரும் சேர்ந்து அரசியலில் தள்ளுகிறார்கள் என்று புரியவில்லை.

ஏதோ நடித்தோமா, நூறு கோடி சம்பளம் வாங்கிப்போட்டாமா, இமய மலை போய்விட்டு வந்தோமா என்று சந்தோஷமாக இருக்கும் மனிதனை ஏன் இப்படி இம்சை செய்கிறார்கள் என்று நினைத்தால் பாவமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response