
ஐ.பி.எல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் திரிபாதி 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரசுல் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் பட்லருடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ரஹானே.
அதிரடியாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த பட்லர் 38 (19) ரன்களும், அவரைத் தொடர்ந்து கேப்டன் ரஹானே 11 (12) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்தில் அவுட்டாகி பெவிலியின் திரும்பினா். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் ஆரவாரம் செய்தனா். இவர்களை தொடர்ந்து சாம்சன்னும் 12 (10) ரன்களில் வெளியேறினார். இதை தொடா்ந்து வந்த வீரா்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்னில் வெளியேறி அதிர்ச்சியை அளித்தனா். இதனால் ராஜஸ்தான் அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனா். ஜெயதேவ் யூனாட் மட்டும் கடைசி தருவாயில் அணியின் ரன்னை உயர்த்த போராடினார். பின்னா் அவரும் 19 ஓவரின் கடைசியில் 26 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகினார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் சுனில் நரைன் மற்றும் கிறிஸ் லைன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அதிரடியாக ரன் சேர்த்த சுனில் நரைன் 21(7) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து ஆடவந்த உத்தப்பாவும் 4(6) ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய நிதிஸ் ராணா 21(17) ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோதி பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில் கிறிஸ் லைனுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தியது. அப்போது எதிர்பாராத விதமாக கிறிஸ் லைன் 45(42) ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். கடைசியில் கேப்டன் கார்த்திக் 31(28) ரன்களும், ஆண்ட்ரு ரசுல் 20(8) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், சோதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.


