அண்மைக் காலமாக மேடைதோறும் சீமான் மற்றும் நாம்தமிழர் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் வைகோ.
இதற்குப் பதிலடியாக நாம்தமிழர்கட்சியினர் வைகோவை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், நாம்தமிழர் கட்சியின் இணையதளப் பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்….
அண்ணன் சீமானின் அறிவுறுத்தலின் இதைப் பகிர்கிறேன்.
மதிமுக பற்றியோ அதன் தலைவர் வைகோ பற்றியோ யாரும் முகநூலிலோ ட்விட்டரிலோ மற்ற இணைய வெளிகளிலோ எக்காரணம் கொண்டும் பதிவிடக் கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்படுகிறது.
அவதூறுகளைக் கடந்து செல்லுங்கள். மேடைக்கு மேடை நம்மைத் தூற்றினாலும் அவர்களைப் புறக்கணியுங்கள். #புறக்கணிப்பை விடப் பெரிய தண்டனை ஏதும் கிடையாது. உயர்ந்த நோக்கத்தையும் கொள்கையையும் கொண்டு பயணிக்கும் நாம் இதற்கெல்லாம் பதில் சொல்லி பாதை மாறக்கூடாது. இலக்கை தீர்மானித்து அரசியல் களத்தில் எதிரியை தீர்மானித்துப் பயணிக்கும்
நாம் இந்தத் திட்டமிட்ட திசை திருப்பல்களில் பலியாகி விடக்கூடாது.
நம்மை வீழ்த்த நம்மைச் சுற்றி பெரும் வேலைகள் நடக்கிறது. அதில் இந்த அவதூறுகள், வீடு தேடி வந்து மிரட்டுதல் எல்லாம் அடங்கும்.
நாம் ஏதேனும் எதிர்வினையாற்றுவோம் அதை வைத்து நம்மை மேலும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யாதீர்கள்.
நீங்கள் ஏதேனும் பதிவிடவேண்டும்
என்றால் உங்கள் பகுதிகளில் ஏதேனும் கட்சிப்பணி செய்து அதைப் பதிவேற்றுங்கள்.
நமது வரைவு அறிக்கையைப் பற்றிப் பதிவிடுங்கள். இவை ஏதும் இல்லையேல்..
தினம் ஒரு திருக்குறள் பகிருங்கள். தினம் ஒரு பாரதிதாசன் கவிதை பகிருங்கள்.
கட்சியின் மற்ற செய்திகளைப் பரப்புங்கள். நமது காணொளிகளைப் பகிருங்கள்.தினம் ஒரு செய்தியை பகிருங்கள். அதுவும் செய்யப் பிடிக்கவில்லையா. அமைதியாகக் கடந்துசெல்லுங்கள்.
எல்லாவற்றிற்கும் கருத்துச் சொல்லவேண்டும். நம்மை நோக்கி வரும் எல்லா விமர்சனத்திற்கும் பதில் சொல்லவேண்டும் என்ற உந்துதலிலிருந்து விடுபடுங்கள்..
நாட்கள் குறைவாக இருப்பினும் மே 18 கூட்டத்தை வெற்றிகரமான கூட்டமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கான வேலைகளை முன்னெடுங்கள். அனைத்து தொகுதிகளிலும் கலந்தாய்வை கூட்டுங்கள். பொருளாதாரத்தைப் பகிர்ந்து வரும் வாகனத்தை உடனடியாக உறுதி செய்யுங்கள்.
கூட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த சுவர் பிடித்து விளம்பரம் செய்யுங்கள், சுவரொட்டி ஓட்டுங்கள்.
எந்த நாளில் 9 வருடங்களுக்கு முன் எம்மினம் வீழ்ந்ததாக இன அழிப்பை மேற்கொண்டவர்கள் வெற்றிக்கூத்தாடினார்களோ அன்றைய நாளில் தமிழீழத்திற்காக அந்தக் கனவை சுமந்து போராடி மாண்டவர்களுக்காக நாம் தமிழர் பிள்ளைகள் பெரும் எண்ணிக்கையில் எழுச்சியுடன் கூடி நின்று அந்த உன்னதக் கனவை அடைய உறுதி பூண்டனர் என்ற வரலாற்றை உருவாக்கவேண்டும். தயவு கூர்ந்து உங்கள் கவனத்தை மாநாட்டு வேலைகளில் செலுத்துங்கள்.
துரோகிகளுக்கு எதிரிகளுக்கும் நமது ஒற்றுமையும் செயலும் வளர்ச்சியும் தான் பதிலடி. முகநூல் பதிவல்ல.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.