ஐபிஎல் – சென்னையிடம் போராடித் தோற்றது ஐதராபாத்

ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக்கில் (ஏப்ரல் 22) சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.

ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி அம்பதி ராயுடு – ரெய்னா அதிரடியால் 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் அம்பதி ராயுடு 79 ரன்கள் எடுத்தார். இதேபோல் ரெய்னா 54 ரன்கள் எடுத்தார்.

இதன்பின் இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்குச் சென்னை வீரர் தீபக் சஹார் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார். முதல் ஓவரில் ரிக்கி புகியை அவுட் ஆக்கிய சஹார், அடுத்தடுத்த ஓவர்களில் மனிஷ் பாண்டே மற்றும் ஹூடாவை வெளியேற்றினார்.

4 ஓவர்களில் 17 டாட் பால், ஒரு மெய்டன் 3 விக்கெட் என சஹார் அசத்தினார்.

எனினும் பின்னர் இணைந்த வில்லியம்சன் – யூசுப் பதான் ஜோடி அதிரடியாக ஆடியது. கேன் வில்லியம்சன் 84 ரன்களிலும், பதான் 45 ரன்களிலும் அவுட் ஆகக் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் கடைசி ஓவரில் அந்த அணி 14 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Leave a Response