இழிவான அரசியல் செய்யும் இந்தியா – கமல் காட்டம்

ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி உத்தரவிட்டது. தற்போது ஐந்து வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துவருகிறது.

இந்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங், நேற்று (21.03.2018) தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி தீர்ப்பளிக்கவில்லை; மாறாக, ‘ஒரு செயல்திட்டத்தை’ அமைக்கச் சொல்லியிருக்கிறது” என்று மீண்டும் கூறியுள்ளார்.

அச்செயல் திட்டத்தை மார்ச் 30க்குள் அமைக்க வாய்ப்பில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். “தொடர்புடைய அனைத்து மாநிலங்களும் ஏற்கும் ஒரு சரியான செயல் திட்டத்தை அமைக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளும் அதிகாரமில்லாத செயல் திட்டத்தைத்தான் இந்திய அரசால் உருவாக்க முடியும் என்பதை சுற்றிவளைத்து யு.பி. சிங் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவில்,

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்துகொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா. இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்

என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response