ம.நடராசன் உடல் நல்லடக்கம்

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராசன் மார்ச் 20,2018 அதிகாலை சென்னையில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் அன்று மதியமே அவரது உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்குக் கொண்டு வரப்பட்டது. இரவு 7.10 மணிக்கு அவருடைய உடல் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ம.நடராசன் இறந்த தகவல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். சிறை நிர்வாகம் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து பெங்களூரு சிறையில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மார்ச் 20 மதியம் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு இரவு தஞ்சை வந்து சேர்ந்தார்.கணவர் நடராசனின் உடலைப்பார்த்து அவர் கதறி அழுதார். மேலும் அவர் கணவரின் உடல் அருகிலேயே சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

நேற்று (மார்ச் 21) ம.நடராசன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 4.20 மணி அளவில் ம.நடராசனின் உடல் அருளானந்த நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் யாகப்பா நகர், நாஞ்சிக்கோட்டை சாலை, ஆர்.ஆர்.நகர் வழியாக விளார் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், விவேக் ஜெயராமன், பாஸ்கரன், ஜெய் ஆனந்த் மற்றும் உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு ம.நடராசன் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், நடராசனின் சகோதரர் விளார் சாமிநாதன், வக்கீல் நல்லதுரை, ம.தி.மு.க. தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர் விடுதலை வேந்தன், பேராசிரியர் பாரி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

வீரவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் ம.நடராசன் உடல் அங்கிருந்து அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்குகளை நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனின் மகன் டாக்டர் ராஜூ செய்தார். பின்னர் ம.நடராசன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Response