மாற்றுத்திறனாளிகளுக்காக சத்யபாமா எம் பி எடுத்த முயற்சிக்கு உடனடி பலன்

திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சத்தியபாமா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லாட்டை மார்ச் 8 ஆம் தேதி நேரில் சந்தித்து அளித்த கடிதம்….

மாற்றுத்திறனாளிகளுக்காக தேசிய அளவில் செயல்படும் ஷக்‌ஷம் அமைப்பு தமிழ்நாட்டில் திருப்பூரில் ADIP திட்டத்தின் கீழ் செயற்கை கை கால்கள் உற்பத்தி நிறுவனமான ALIMCO உடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு முகாம்களை ஐந்து இடங்களில் நடத்தியது.

திருப்பூர் மாவட்டத்தில் பதிவுபெற்ற சுமார் 20- ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் மேற்குறிப்பிட்ட முகாம்களில் கலந்துகொண்ட நிலையில் அவர்களில் 2513 பேர் செயற்கை கை, கால்கள் மற்றும் கைத்தடி, காது கேளாதவர்களுக்கான கருவிகள் ஆகிய உபகரணங்களைப் பெற பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களுக்கு செயற்கை கை மற்றும் கால்களை வழங்கும் நோக்கில் அதற்கான அளவுகளையும் ALIMCO நிறுவனம் குறித்துச் சென்றது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த உதவி உபகரணங்களையும் கருவிகளையும் வழங்கவும் அந்த நிறுவனம் உறுதியளித்தது.

ஆனால் 90 நாட்கள் கழிந்த நிலையில் இந்த உதவி உபகரணங்களை வழங்குவது பற்றி மத்திய அமைச்சகத்திடம் இருந்து எந்த அறிவுறுத்தலையும் பெறவில்லை என்று அலிம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தேவையற்ற காலதாமதத்தால் குழப்பமும் அந்த நிறுவனத்துக்கு அவப்பெயரும் ஏற்படும் நிலையில் மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு எப்போது உதவி உபகரணங்கள் வழங்கப்படும் என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இதனால் ஷக்‌ஷம் நிறுவனத்துக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த விஷயத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகள் உரிய உதவி உபகரணங்கள் மற்றும் கருவிகளை உடனடியாக எந்தவிதத் தாமதமும் இன்றி பெற்றிட ஆவண செய்யவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

மார்ச் 8 ஆம் தேதி கொடுத்த கடிதத்துக்கு மார்ச் 13 அன்று அமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த பதில் கடிதம்…..

வணக்கம்.திருப்பூர் தொகுதி எம்.பி சத்தியபாமா அவர்கள் 8.03.2018 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தாவர் சந்த் கெஹ்லாட் அவர்களிடம் ‫திருப்பூர் மாவட்டத்தில் பதிவுபெற்ற ஏழை மக்களுக்கு உதவும் செயற்கை கருவிகள் மற்றும் நிவாரண உதவிகளை ‬ உடனடியாக எந்தவிதத் தாமதமும் இன்றி பெற்றிட ஆவண செய்யவேண்டுமாறு நேரில் அளித்த கோரிக்கைக்கு 13.03.2018 அன்று மத்திய சமூக  மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு தாவர் சந்த் கெஹ்லாட் அவர்கள் அளித்த பதில் கடிதம்:

ADIP திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் கருவிகள் கேட்டு 08.03.2018 அன்று தேதியிட்ட விண்ணப்ப கடிதம் பெற்றேன்.

அக்கோரிக்கையை மேற்படி எனது துறை சார்ந்த அலுவலத்தின் செயலாளருக்கு ஆவண செய்யுமாறு பரிந்துரை செய்து உள்ளேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சத்யபாமாவின் இந்நடவடிக்கையால் மாதக்கணக்கில் காத்திருந்த மாற்றுத்திறணாளிகளுக்கான உதவிகள் உடனே கிடைக்கவிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

Leave a Response