
புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன் (சசிகலா நடராஜன்). 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது.
புதியபார்வை ஆசிரியராக அறியப்படும் நடராசனுக்கு நீண்ட அரசியல் அனுபவம் உண்டு.
தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்பன். அவருடைய மகன் நடராசன்.
1960களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் தீயாய்ப் பரவிய திராவிட இயக்கங்கள், நடராசனிடம் தமிழ் ஆர்வத்தையும், அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது. தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராசன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராசன், 1965ஆம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். காளிமுத்து, நா.காமராசன் போன்றோருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார். கருணாநிதி தமிழக முதல்வராக முதல் முறை ஆனபோது, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ஏபிஆர்ஓவாக நடராசனை நியமித்தார்.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தைச் நடராஜனுக்கும் 1970-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
1980-ம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராசன் பணியாற்றினார். சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மூலம் ஜெயலலிதாவுடன் நடராசனுக்கு அறிமுகம் கிடைத்தது.
எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுத்துக் கொடுத்த வினோத் வீடியோ விசன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா.
ஜெயலலிதா உடன் நட்பு ஏற்பட்டது. சாதாரணமாக வேதா நிலையத்திற்குள் போன சசிகலா நிரந்தரமாகவே வேதா நிலையத்தில் தங்கிவிட்டார். பாதுகாப்பு அரண் 1984ல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகம் முழுவதும் ஜெயலலிதா உடன் பிரசாரத்தில் வலம் வந்தார். ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக தனது தம்பி திவாகரனையும் உடன் அழைத்து வைத்தார்.
1985-ல் ஜெயலலிதா நேரடி அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடராசன்.
1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நடராசன்.
ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தருவது நான்தான் என்று நடராசன் சொன்னதாக தகவல் எட்ட அதுமுதல் நடராசன் – ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடித்தது.
கணவரா, தோழியா என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுக்கிறார் சசிகலா. அதுமுதல் கணவன் மனைவி உறவை விட நட்புதான் முக்கியம் என்பதை நிரூபித்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் தங்கி விட்டார் சசிகலா.
அதிமுகவுக்கும் நடராசனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கைகள் விடுமளவுக்கு அதிமுகவை பின்னாலிருந்து இயக்கிக்கொண்டிருந்தவர் நடராசன்.
அறிஞர் அண்ணாவிடம் அரசியல் கற்றவர்களில் ஒருவர் நடராசன். காலமெல்லாம் திராவிட இயக்கங்களின் பாதுகாவலராகவும், தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுத்தவராகவும் விளங்கிய அவரை சசிகலாவின் கணவர் என்று வெகுமக்கள் அறிந்துவைத்திருப்பதுதான் கொடுமை.
