நாஞ்சில்சம்பத் அடுத்து இணையவிருக்கும் கட்சி இதுதானா?

மதிமுகவில் முன்னணிப் பேச்சாளராக இருந்த நாஞ்சில்சம்பத், ஜெயலலிதா இருந்தபோது மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

தனது அதிரடி கருத்துகளால் பெயர்பெற்ற நாஞ்சில் சம்பத்தை கட்சியின் கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பை கொடுத்து புது இன்னோவா கார் ஒன்றையும் பரிசளித்தார் ஜெயலலிதா.

அதுமுதல் இன்னோவா சம்பத் என்று நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டார்.

பின்னர் அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து அவர் தாமாக கருத்து தெரிவித்ததால் கொ.ப.செ. துணைச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவை ஏற்க மனமில்லை என்று இன்னோவா காரை திருப்பி கொடுத்தார். ஆனால் சசிகலா அழைத்துப் பேசி கட்சிப்பணியாற்றக் கேட்டுக்கொண்டு இன்னோவா கார் சாவியை மீண்டும் சம்பத்திடம் கொடுத்தார்.

இதனால் நெகிழ்ந்து போன சம்பத் பின்னர் சசிகலா அணியின் பிரச்சார பீரங்கியானார்.வாதம் வைப்பதில் தனித்துவமிக்கவர், வித்தியாசமாக பேசக்கூடியவர் சம்பத்.

டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் தினகரன் அணியில் நீடித்தார். ஆளுங்கட்சி மீது கடுமையான விமர்சனம் வைத்ததால் அவர் மீது வழக்கு பாய்ந்தது.

ஒரு கட்டத்தில் விரக்தியுற்ற அவர் ஒதுங்கி இருக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் புதிய அரசியல் கட்சியை துவக்கினார். இதையடுத்து மார்ச் 16 ஆம் தேதி இதை விமர்சனம் செய்து டிடிவி அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரது விளக்கம்:

காலம் காலமாக எந்தக் கொள்கையைப் பேசி வந்தேனோ, காலங்காலமாக எந்தக் கொள்கையை எங்கெல்லாம் கொண்டு சென்றேனோ அந்தக் கொள்கையை ஒரு பகலில் படுகொலை செய்துவிட்டார் தினகரன்.

இன உணர்வுக் கொள்கையைக் கொட்டிக்கவிழ்த்து விட்டார் தினகரன்.

அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இந்தப் பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை, டிடிவி அறிவித்த கட்சி பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க மாட்டேன். இனி எந்த கட்சிக்கொடியையும் தூக்கி சுமக்க மாட்டேன். எந்த தலைவனையும் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன். இனிஅ தனிப்பறவையாக பறப்பேன்.

என்னை யாரும் சமாதானம் படுத்த முடியாது. என்னை யாரும் நெருங்க முடியாது. கரையான்கள் நெருப்பை அரிக்க முடியாது.

என் மூளையைச் சலவை செய்ய எந்த முட்டாளும் முயல வேண்டாம். அடுத்தக்கட்டமாக இலக்கியப் பணியை செய்வேன், இனி இளைஞர்களுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், நாஞ்சில்சம்பத் கமல் கட்சியில் இணையப்போகிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response