மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ன ஆகும்? – ஓர் அலசல்

உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் நடந்த பாராளுமன்றத்தின் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் இழந்தது பாஜக.

2014 ஆ ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்ற கடந்த நான்காண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளை இழந்துவிட்டது. இப்போது மக்களவையில் அதன்பலம் 272. பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவு.

பாஜகவின் கூட்டணியில் 18,16 இடங்களை வைத்திருக்கும் சிவசேனாவும் தெலுங்குதேசமும் பாஜகவுக்கு எதிராகிவிட்டன. ஓரிரு இடங்களை வைத்திருக்கும் சிறு கட்சிகளும் பாஜக சொன்னதைச் செய்யாமல் ஏமாற்றியதால் அதிருப்தியில் இருக்கின்றனவாம்.

இந்நிலையில்தான், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில், மக்களவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மக்களவைச் செயலாளர் சினேகலதா ஸ்ரீவத்சவாவிடம் அந்த கட்சியின் கொறடாவும், ஒங்கோல் தொகுதி எம்.பி.யுமான ஒய்.வி.சுப்பரெட்டி நோட்டீஸ் அளித்தார். அவை விதி எண் 198 பி-ன் கீழ் இந்த தீர்மானத்தை நாளை (இன்று) அவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என அவர் அதில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘2014-ம் ஆண்டு ஆந்திராவை பிரித்தபோது மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே எதிர்க்கட்சிகளிடமும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியினரிடமும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு கேட்போம்’ என்று தெரிவித்தார்.

ஆந்திர அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த ஒய் எஸ் ஆர் கட்சியும் தெலுங்குதேசமும் பாஜகவை எதிர்க்க ஒருங்கிணைந்துள்ளன.

இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது முறையான வாக்கெடுப்பு நடந்தால் மோடி வீட்டுக்குப் போவது நிச்சயம் என்கிறார்கள்.

Leave a Response