கார்த்திசிதம்பரம் கைதுக்குக் காரணம் இதுதான் – பிரியங்கா சதுர்வேதி ஆவேசம்

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பண பரிவர்த்தனை புகாரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இலண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காகவும், வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவும் ஜனவரி 11, 16 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

தொடர்ந்து சென்னை, டெல்லியில் உள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல முறை சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இலண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, பாஜகவின் திசை திருப்பும் அரசியல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:

நரேந்திர மோடி அரசு வழக்கமான தந்திர அரசியலை கையாள்கிறது. பிரதமர் மோடி அரசு தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. தினந்தோறும் இந்த அரசு மீது புதிய புதிய ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, துவாரகா தாஸ் என அடுத்தடுத்து வங்கி மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மத்திய அரசு மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் இருந்து திசை திருப்பவே தற்போது கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது.

பாஜகவின் பழிவாங்கும் அரசியல் தொடர்கிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கும் பாஜகவின் நடவடிக்கையே இது எனக் கூறியுள்ளார்.

Leave a Response