விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கவேண்டும்-தமிழக அரசு

ltte2

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளிலும், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதால், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அவர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக  மத்திய மற்றும் தமிழக அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலமைகளை கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருதி அவர்கள் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் நீதிமன்றத்தில்  கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பில் ஆராய்ந்துவரும் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்தில் இந்திய மத்திய அரசினதும், தமிழக அரசினதும் சார்பில் ஆஜராகிய  வழக்குரைஞர்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த தீர்ப்பாயத்தின் இறுதிக்கட்ட விசாரணை  புது டில்லி உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள விசேட தீர்ப்பாயத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது.

இதில் இந்திய மத்திய அரசின் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ் ஜெயின் தன்னுடைய வாதத்தில், விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் இந்தியாவில் தொடர்ந்து வருவதாக உளவுத்துறையின் தகவல்கள் கிடைத்து வருவதாகக் கூறினார்.

இந்த நிலமைகள் இந்தியாவின் இறையாண்மைக்கும், அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும் என்று தெரிவித்த அவர், அதனால் விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இதே வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்  யோகேஷ் கன்னா தன்னுடைய வாதத்தில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012, மே 14 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை இவர்களில் சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய தமிழக அரச சட்டத்தரணி விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகவும், அவர்களின் தனி ஈழம் குறித்த கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் சிலர் பிரசாரம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த பிரசாரங்களில் அவர்கள், இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்திய அரசே காரணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றவதால், இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருதி அவர்கள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான  வழக்குரைஞர்  நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான விசேட தீர்ப்பாயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

Leave a Response