விக்னேஸ்வரன் அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், சி.வி.விக்னேஸ்வரன், வெளிநாடு ஒன்றுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது.

சென்னையில் வரும் 9ம் நாள் நடக்கவுள்ள, முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் கண்ணபிரான் நினைவு நிகழ்வில், நினைவுப் பேருரையாற்றுவதற்கே அவர்   வருகிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு மட்டுமே இம்முறை பயணம் செய்வார் என்றும், புதுடெல்லிக்கு செல்லமாட்டார் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன், தானும் தமிழ்நாட்டுக்குச் செல்வதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது, தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையோ, திமுக. தலைவர் மு.கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையோ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாகச் சந்திக்கமாட்டார் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இடையிலான சந்திப்பை ஒழுங்கு செய்வதற்கு இந்தியாவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், எனினும் இப்போது அதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Response