மோடி,அருணஜெட்லியை கிழித்துத் தொங்கவிட்ட யஷ்வந்த்சின்கா கட்டுரை இதுதான்


மோடி அரசுக்கு எதிராக புயலைக் கிளப்பியுள்ள “நான் இப்பொழுது கட்டாயம் பேசியாக வேண்டும்” யஸ்வந்த் சின்ஹாவின் கட்டுரை

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

இப்பொழுதும் நான் வாய்மூடி மவுனமாக இருந்தால் என்னுடைய தேசிய கடமையை ஆற்ற நான் தவறிவிட்டேன் என்று தான் கருதவேண்டும்.
இப்பொழுதுள்ள நிதியமைச்சர் இந்திய பொருளாதாரத்தை குப்பையாக குழப்பி வைத்திருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியில் உள்ள பெரும்பாலானவர்களும் மற்ற இடங்களில் உள்ளவர்களுகும் நான் கூறப்போகும் இதே விஷயத்தை உணர்வு பூர்வமாக தெரிவிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் பயம் காரணமாக பேசவில்லை.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைசிறந்தவர். அரசு பொறுப்பில் இருப்பவர்களில் அறிவுத்திறன் மிக்கவர் என்று கருதப்படுகிறது.
2014ம் ஆண்டு தேர்தல் வருவதற்கு முன்னாலேயே மோடி அரசில் அவர் தான் நிதி அமைச்சர் என்று உறுதி செய்து விட்டார்கள். அமிர்தசரஸ் நகரில் மக்களவை தேர்தலில் அருண் ஜேட்லி தோற்றுப்போனார். ஆனால் நாடாளுமன்றத்திற்கு அவர் வர வகை செய்தார்கள்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜஸ்வந்த் சிங், பிரமோத் மகாஜன் விஷயத்தில் இதே மாதிரி பிரச்சினை ஏற்பட்டது. அந்த இருவரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற போதிலும் அவர்களை அமைச்சரவைக்கு நியமிக்க வாஜ்பாய் மறுத்து விட்டார்.
அருண் ஜெட்லி கையில் நிதித்துறையோடு முதலீட்டு விலக்கத்துறை, பாதுகாப்புத் துறை, கார்ப்பரேட் விவகாரத் துறை ஆகியவைகளையும் பிரதமர் ஒப்படைத்தார்.
அந்த நான்கில் மூன்று இன்னும் அருண் ஜெட்லி கையில் உள்ளது. நான் மத்திய நிதி அமைச்சராக இருந்தவன். நிதித்துறையின் வேலைப் பளு என்ன என்று எனக்கு தெரியும்.
நிதி அமைச்சரின் சேவை 24 மணி நேரமும் ஏழு நாட்களும் தேவை. அருண் ஜெட்லியால் கூட அந்த வேலைப்பளுவுக்கு ஏற்ப இயங்க முடியாது.
ஜெட்லி அதிர்ஷ்டம் உள்ள நிதி அமைச்சர். நிதித்துறையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு நிதி அமைச்சரானார். அவர் காலத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது. அதனால் கோடிக்கணக்கான ரூபாயை அவர் விருப்பப்படி செலவிட முடியும். இந்திய பொருளாதாரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு தேங்கி கிடக்கும் திட்டங்களும் வங்கிகளின் வராக் கடனும் இந்த கோடிக்கணக்கான ரூபாய்களை பயன்படுத்தி சமாளித்திருக்கலாம். ஆனால் எண்ணெய் விலை குறைந்ததால் மிச்சமான கோடிக்கணக்கான ரூபாய்களை அருண் ஜெட்லி வீணடித்துவிட்டார்.
பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அவை இன்னும் மோசமாக அனுமதித்துவிட்டார். இந்திய பொருளாதாரம் இன்று எந்த நிலையில் உள்ளது? அன்னிய மூலதன வருகை குறைந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தளவுக்கு குறைந்ததில்லை. தொழில் துறை உற்பத்தி சீர் குலைந்துவிட்டது. விவசாயம் சிக்கி தவிக்கிறது. கட்டுமானத் தொழில் செல்லும் திசை தெரியாமல் தவிக்கிறது. மற்ற சேவை துறைகளும் நத்தை வேகத்தில் நகர்கின்றன.
ஏற்றுமதி குறைந்துவிட்டது. ஒவ்வொரு துறையாக இந்திய பொருளாதாரம் தேய்ந்து வருகிறது என தகவல்கள் கிடைக்கின்றன.
உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்துச்செய்தது பொருளாதார பேரழிவு என்பது இப்பொழுது உறுதியாகிவிட்டது.
மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி மிகவும் மோசமாக திட்டமிடப்பட்டு அதைவிட மோசமாக அமல் செய்யப்பட்ட அழிவு என்பதும் உறுதியாகி விட்டது.
தொழில் நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் மீள முடியாமல் தவிக்கின்றன. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோய்விட்டது. புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை். ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய பொருளாதாரம் சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டின் நம்முடைய வளர்ச்சி 5.7 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஆனால் மத்திய அரசின் பேச்சாளர்கள் அனைவரும் பொருளாதார சரிவுக்கு உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்துச் செய்தது காரணம் அல்ல என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது ஒருவகையில் சரிதான். ஏனென்றால் பொருளாதார சரிவு ரூபாய் நோட்டுகளை ரத்துச் செய்வதற்கு முன்பே தொடங்கிவிட்டது.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்டார் போல ரூபாய் நோட்டுகள் ரத்துச் செய்தது சரிவை தூண்டி விட்டிருக்கிறது.
2015ம் ஆண்டில் ஜிடிபி கணக்கிடும் முறையை மாற்றியிருக்கிறார்கள். பழைய முறையில் கணக்கிட்டால் இப்பொழுது வளர்ச்சி விகிதம் 5.7 ஆக இருக்காது. அதற்கு பதிலாக 3.7 ஆகவோ அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பொதுத்துறை வங்கி. எனினும், அந்த வங்கி ஒளிவு மறைவு இல்லாமல் பொருளாதார தேக்க நிலை பற்றி கருத்து கூறி உள்ளது.
இன்றைய பொருளாதார சரிவு தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல. சிறிது காலத்திற்கு பின் தானாக சரியாகிவிடும் என்று கூற முடியாது. அடிப்படை பிரச்னை காரணமாக சரிவு ஏற்பட்டுள்ளது.
தொலைபேசி துறைக்கூட நீண்டகாலமாக பொருளாதார சிக்கலில் அழுந்தி இருப்பதாக ஸ்டேட் வங்கி கூறியது. இந்த நிலைக்கு காரணம் என்ன? அவற்றை வேறெங்கிலும் தேட வேண்டியது இல்லை. இந்திய பொருளாதாரத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை விட்டுவிட்ட காரணத்தால் அவை இப்பொழுது பூதம் போல வளர்ந்து பெரிதாகி இன்றைய நெருக்கடியை தோற்றுவித்துள்ளன.
இத்தகைய சிக்கலை முன்கூட்டியே கணித்து அதற்கு தீர்வு காண நடவடிக்கைகளை எளிதாக எடுத்திருக்கலாம். ஆனால் நிதி அமைச்சருக்கு அவற்றை கவனிக்க நேரம் இல்லை. முழு கவனத்தோடு அவர் செயல்படத் தவறிவிட்டார். பிரச்னை என்ன வென்று புரிந்து கொண்டு அவற்றுக்கு தீர்வு காண அவர் முயற்சிக்கவில்லை. தன்னால் முடியாத அளவுக்கு பிரச்னைகளை தூக்கி சுமக்கிறவரிடமிருந்து இதற்கு மேல் எதிர் பார்க்க முடியாது.
அதன் விளைவுகளை நாம் எல்லோரும் பார்க்கிறோம். நமது பிரதமர் இப்பொழுது கவலைப்படுகிறார். பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண நிதி அமைச்சர் மற்றும் அவரது அமைச்சக அதிகாரிகளுடன் நடக்க இருந்த கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வளர்ச்சியை தூண்ட நிதி அமைச்சகத்தின் சலுகைத்திடட்ம் ஒன்றை வெளியிடலாம். அது உதவும் என்று நிதி அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.
நாம் எல்லோரும் மூச்சை அடக்கிக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிவாரணம் வந்த பாடில்லை. இப்பொழுது பொருளாதார ஆலோசனை கவுன்சிலை அமைத்து இருக்கிறார்கள்.
கவுன்சிலின் பஞ்சபாண்டவர் போல ஐந்து பேரை பிரதமர் நியமித்து இருக்கிறார். அந்த ஐந்து பேரும் நமக்காக மகாபாரத போரில் வெற்றியை தேடித் தர போகிறார்கள். இந்தாண்டு பருவ மழை சந்தோஷப்பட கூடிய அளவில் இல்லை. நமது கிராமப்புற மக்களின் சிக்கலை இன்னும் அதிகரித்து விடும்
சில மாநிலங்கள் தங்கள் மாநில விவசாயிகளுக்கு கடன் ரத்துக்களை அறிவித்து இருக்கிறார்கள். ஒரு பைசா முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
40 கம்பெனிகள் மீது கடனை செலுத்தாத காரணத்தால் திவால் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கம்பெனிகள் மீதும் திவால் நடவடிக்கைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் இதுவரை பார்க்காத அளவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி திட்டத்தின்கீழ் 95 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. அதில் அரசு திருப்பி தரவேண்டிய தொகையாக ரூ.65 ஆயிரம் கோடியை வரி கட்டுவோர் கோரி உள்ளனர். இவ்வளவு பெரும் தொகையை கேட்பவர்கள் யார் என்று பார்க்கும்படி நிதி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
சிறு தொழில் துறையை சேர்ந்த பல கம்பெனிகள் பணத் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுதான் நம்முடைய நிதி அமைச்சகத்தின் செயல்பாடுகள் ஆகும். முன்பு நமது வருமான வரித்துறை அடிக்கடி சோதனை நடத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இப்பொழுது தினந்தோறும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்துச் செய்ததைத் தொடர்ந்து பல லட்சம் பேருடைய பொருளாதார தலைவிதியை வருமான வரித்துறை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் சிபிஐயும் முழு வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. எல்லோர் மனங்களிலும் இப்பொழுது அச்சமே நிரம்பி இருக்கிறது.
பொருளாதாரங்களை அழிப்பது எளிது. ஆனால் அவற்றை கட்டி காத்து வளர்ப்பது கடினம். கடந்த 90 ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிகுந்த சிரமப்பட்டு இந்திய பொருளாதாரத்தின் தளர்ச்சியை போக்க பாடுபட்டோம்.
2000த்தின் துவக்கத்திலும் உழைக்க வேண்டியிருந்தது. யார் கையிலும் பொருளாதார மந்திரக் கோல் இல்லை. ஒரே நாளில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது. நாம் இப்பொழுது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உடனே பலன் தெரியாது. நம்முடைய பொருளாதாரம் வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வளர்ச்சி பாதைக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பு உள்ளதா என்பது சந்தேகம்தான்.
பழுதுபட்ட விமானம் தரையில் விழுவதை தவிர்க்க முடியாது. ஒருவரிடம் நேரில் பேசும்போது மெதுவாக பேசலாம். பொய்யை நாடகப் பாணியில் கூறலாம். ஆனால் உண்மை நிதர்சனமாக வெளிப்படும்போது இவையெல்லாம் ஆவி ஆகிவிடும்.
நம்முடைய பிரதமர், “நான் என்னுடைய வாழ்க்கையின் துவக்கத்தில் இருந்த வறுமையை நேருக்கு நேராக வெறுக்கிறேன்” என்று கூறி உள்ளார். நம்முடைய இந்திய குடிமக்கள் அனைவரும் வறுமையை நேருக்கு நேராக சந்திக்க வேண்டுமென்று நமது நிதி அமைச்சர் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது.

மொழியாக்கம்: க.சந்தானம்.

Leave a Response