பாராளுமன்றத்தில் 40 தமிழர்களும் 460 தமிழர் அல்லாதவரும் இருப்பதால்,தமிழருக்கு அடிமை நிலை – சி.பா. ஆதித்தனார்

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆகையால் அதில் இருப்பதில் அனுகூலம் உண்டு என்று சிலர் சொல்லுகிறார்கள். ஒரு பெரிய தேசத்துக்கு அடிமையாய் இருப்பதைவிட சிறிய நாட்டில் சுதந்திரத்துடன் இருப்பதே சிறந்தது.

பார்க்கப் போனால், தமிழ்நாடு ஒரு சிறிய நாடு என்று சொல்லிவிட முடியாது.

450 இலட்சம் தமிழர்கள் வாழுகிற நம் தமிழகம் தனி சுதந்திர நாடாக இயங்குமானால், அது எகிப்து நாட்டை விடப் பெரியதாக இருக்கும். 2 கோடி மக்கள் தொகை உள்ள எகிப்து நாடு, பிரிட்டன் பிரான்சு முதலிய தேசங்களை எதிர்த்தது நினைவிருக்கலாம். அது போன்ற நாடாகத் தமிழ்நாடு இருந்தால் போதாதா?

சுதந்திரத் தமிழ்நாடு என்பது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் இருக்கிறது என்று அமைச்சர் கக்கனார் சொன்னார். (சேலத்தில் பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கக்கன் பேசுகையில், மேற்கண்டவாறு சொன்னார்).

உலகத்தில் எத்தனை நாடுகள் சுதந்திரமாக இருக்கின்றன என்பதும், அந்த நாடுகளில் எத்தனை நாடுகள் தமிழ்நாட்டை விட சிறியவை என்பதும் கக்கனாருக்குத் தெரியுமா? தமிழ்நாட்டை விட சிறியவைகளாக 106 நாடுகள் சுத்த சுதந்திரத்துடன் வாழுகின்றன என்பதும், அந்த நாடுகள் எல்லாம் உலக நாடுகள் சபையில் (ஐ.நா.சபை) உறுப்புகளாக இருக்கின்றன என்பதும் அமைச்சருக்கு தெரிந்திருந்தால், அவர் அப்படிப் பேசியிருக்க மாட்டார்.

தமிழ்நாடு குண்டு சட்டிபோல் சின்னதாக இருந்தால் அதைவிட சிறியதாக இன்னும் 106 சுதந்திர நாடுகள் இருக்கின்றனவே! அவை எல்லாம் குண்டு சட்டிக்கும் சிறியவைகள் என்று ஆகிறதல்லவா? அவை குண்டு சட்டியை விட சின்னதாக தேனீர் கோப்பைக்குள் குதிரை ஓட்டுகின்றனவே!

உலக நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மன்றத்தில் மொத்தம் 114 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகள் ஒவ்வொன்றுக்கும் சொந்தக் கொடியும் சொந்த ஆட்சியும் இருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்கு இத்தகைய தனி அரசு இல்லை.
இன்று, இலங்கையில் உள்ள சிங்களவன், தமிழ் மக்களை கள்ளத்தோணி என்று ஏசுகிறான்! தமிழ் மக்கள் 450 இலட்சம் பேர் இருந்தும், தனி அரசு என்ற தகுதி இல்லாத காரணத்தால், இலங்கையில் உள்ள 65 இலட்சம் சிங்களவர்கள் ஏளனம் செய்கிறார்கள்! சிங்களவர்களுக்குச் சிங்கக் கொடியும், தனி அரசும் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்கும் தனி அரசு இருந்தால் இலங்கையில் இருந்து தமிழ் மக்களை விரட்டியடிக்கும் நிலைமை ஏற்படாது.

நாம் சுதந்திரம் அற்று அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதைத் தமிழ் மக்கள் போதிய அளவுக்கு உணர்ந்து கொள்ள வில்லை. அடிமைத் தன்மையின் கொடுமை என்னவென்றால், அடிமையாக வாழுகிற மக்கள் அவர்களுடைய நிலைமையை உணராமல் இருக்கச் செய்து விடுகிறது என்பது தான்! இது தமிழ்நாட்டின் சரித்திரத்தில் நாம் கண்ட உண்மை. அயர்லாந்து நாட்டின் சரித்திரத்திலும் இந்த உண்மையைக் காணலாம்.

அயர்லாந்து தேச வரலாற்றை ஊன்றிப் படித்தால், அதற்கும் நமது நாட்டு வரலாற்றுக்கும் உள்ள ஒற்றுமைகள் விளங்கும். தமிழ்நாடு இந்தியா தேசத்தின் ஒரு பகுதியாக இப்போது இருப்பது போல், அயர்லாந்து நாடு பிரிட்டன் தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. டெல்லி பாராளுமன்றத்திற்கு தமிழ்நாட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் போவது போல், அயர்லாந்து தேசத்தவர்கள் 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரிட்டிஷ் பார்லிமெண்டில் அமர்ந்து இருந்தார்கள். அப்படி இருந்தும், அயர்லாந்து தேசத் தலைவர் டிவேலரா என்பவர் உண்மையிலேயே அயர்லாந்து அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்பதை அந்த நாட்டு மக்களை உணரச் செய்தார்.

அரசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு பேரரசு, ஒரு சிற்றரசை அடக்கி ஆண்டால், அந்தச் சிற்றரசு ஒரு அடிமை நாடாகக் கருதப்பட்டது. குடியரசு ஆட்சிமுறை பரவியிருக்கிற இந்தக் காலத்திலும் ஆண்டான் என்பதும் அடிமை என்பதும் உண்டு. ஆனால் பேரரசு- சிற்றரசு என்ற முறையில் அல்ல. பெரும்பான்மை (மெஜாரிட்டி) சிறுபான்மை (மைனாரிட்டி) என்ற முறையில் அடிமைத்தன்மை உருவாகிறது.

டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்களும் 460 தமிழர் அல்லாதவரும் இருப்பதால், தமிழருக்கு ஓட்டுரிமை இருந்த போதிலும், சிறுபான்மையினரான தமிழருக்கு அடிமை நிலை ஏற்படுகிறது.

முப்பது இலட்சம் மக்கள் கொண்ட அயர்லாந்துக்காரர்கள், பிரிட்டன் தேசத்துடன் சேர்ந்திருந்த காலத்தில் அவர்களுடைய தாய்மொழி (ஐரிஷ் மொழி) சீர்குலைந்து, அயர்லாந்துக்காரர் கூட அந்த மொழியில் பேச வெட்கப்பட்ட நிலையில் (இன்று தமிழ் இருக்கும் நிலையில்) இருந்து, இன்னும் கொஞ்ச காலத்தில் ஐரிஷ் மொழி அழிந்து போகுமோ என்று பயப்படும் நிலை ஏற்பட்டது.
ஆனால், அயர்லாந்துக்காரர்கள் அவர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து, சுதந்திரம் அடைந்தார்கள். தனி அரசு ஏற்பட்டவுடன், அயர்லாந்து அரசாங்கம் தாய்மொழியான ஐரிஷ் மொழியில் நடந்தது. சட்டங்கள் அந்த மொழியின் நிலைமையை உயர்வடையச் செய்தன. உலகத்தில் அயர்லாந்துக்காரர்களுக்கு மதிப்பு ஏற்பட்டது.

இதே போல், சுதந்திரத் தமிழ்நாடு! அடைந்தால் தான் தமிழ் மக்களும், தமிழ்மொழியும், தமிழ்நாடும் உலகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும்!

(சி.பா. ஆதித்தனார் எழுதிய ‘தமிழப் பேரரசு’ நூலின் ஒரு பகுதி இது. 1942ஆம் ஆண்டு இதன் முதற் பதிப்பு வெளியானது. அன்றைக்கு அதிகப்படியான தமிழரால் வாசிக்கப்பட்டு பெரும் வரவேற்பை இந்நூல் பெற்றது. அதன் காரணமாக இந்நூல் அடுத்தடுத்து 12 பதிப்புகள் வரை வெளியிடப்பட்டது. ஆதித்தனாருக்கு அயர்லாந்து விடுதலைக்குப் போராடிய டிவேலரா தான் வழிகாட்டி. டிவேலரா நடத்திய இயக்கத்தின் பெயர் (WE ARE IRISH) ‘நாம் ஐரிஷ்காரர்’. அந்தப் பெயரில் ஈர்ப்பு கொண்ட ஆதித்தனார் தமது இயக்கத்திற்கு ‘நாம் தமிழர்’ என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

Leave a Response