மோடி அரசின் உத்தரவை ஏற்கவேண்டாம் – மேற்குவங்க பள்ளிகளுக்கு மம்தா உத்தரவு, மோடி அதிர்ச்சி

இந்திய ஒன்றியத்தின் 70 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் மனீஷ் கார்க், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–சுதந்திர தின பவளவிழா ஆண்டுக்குள் (2022) புதிய இந்தியாவைப் படைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் கனவை நனவாக்கும் வகையில், ஆகஸ்டு 9–ந்தேதி முதல் 30–ந்தேதிவரை, அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘சங்கல்ப்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

அதில், நாட்டை தூய்மை ஆக்கவும், புதிய இந்தியாவைப் படைக்கவும், வறுமை, ஊழல், பயங்கரவாதம், வகுப்புவாதம், சாதிக்கொடுமை ஆகிய 5 பிரச்சினைகளில் இருந்து நாட்டை விடுவிக்கவும் பாடுபடுவோம்’ என்று அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

மேலும், சுதந்திரப் போராட்டம் குறித்து வினாடி வினா போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும். இதற்கான கேள்விகளை நரேந்திரமோடி செயலியில் (ஆப்) இருந்தோ அல்லது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை குறித்து வேறு எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தும் மேற்கு வங்காள மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டாம் என்றும், அதில் கூறியபடி சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் மேற்கு வங்காள மாநில பள்ளிக்கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

மம்தாவின் இந்த நடவடிக்கைக்குப் பெருமளவில் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response