தொடர்ந்து வீரியமாகப் போராடுவோம் – கைதாகி விடுவிக்கப்பட்ட திவ்யபாரதி அறைகூவல்

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை, 2009-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அடிப்படையில் போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. சமூக செயற்பாட்டாளர். துப்புரவுப் பணியாளர் நலனுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார். சென்ற ஆண்டு கக்கூஸ் என்ற பெயரில் துப்புரவுப் பணியாளர்கள் சந்தித்து வரும் கொடுமைகளை விவரித்து ஆவணப்படம் தயாரித்தார். இப்படத்தை தமிழகத்தில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. கேரளத்தில் கக்கூஸ் ஆவணப்படத்துக்காக திவ்யபாரதிக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை மதிச்சியம் போலீஸார் திவ்யபாரதியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திவ்யபாரதி 2009-ல் மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றார். இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) மாணவர் பிரிவில் உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி மன்னர் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவரை பாம்பு கடித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் திவ்யபாரதி தலைமையில் அரசு மருத்துவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் திவ்யபாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்ட் அடிப்படையில் திவ்யபாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரை மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை ஆகஸ்ட் 8 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் சக்திவேல் உத்தரவிட்டார்.

உடனே, திவ்யபாரதியை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வெளியில் வந்த திவ்யபாரதி, ஜே எம் 2 நீதிமன்ற நீதிபதி நிபந்தனை ஜாமினில் என்னை விடுவித்தார். மதிச்சியம் காவல் நிலையத்தில் ஒரு வார காலம் கையெழுத்துப் போடச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் தோழர்களே. வழக்கில் எந்த வேண்டுகோளுமின்றி ஆஜரான அத்துனை வழக்கறிஞர் தோழருக்கும் என் நன்றி.
உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் என் நன்றியும் அன்பும்.
தொடர்ந்து வீரியமாக நம் போராட்டத்தைத் தொடர்வோம் தோழர்களே என்று கூறினார்.

Leave a Response