இந்தியாவெங்கும் இந்தித்திணிப்பு – ட்விட்டரில் பொங்கிய தமிழச்சி

அண்மையில், ‘இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டுமா?’ எனும் தலைப்பில் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பை ட்விட்டரில் நடத்தியது ஒரு தொலைக்காட்சி. அதில் மேற்கு வங்கத்துக்காரர் ஒருவர் இந்திதான் ஒரே தேசமாக ஒன்றிணைக்கும் மொழி என்று சொல்ல, தகுந்த ஆதாரங்களை முன்வைத்து தமிழ்ப் பெண் ஐஸ்வர்யா மறுக்க, அந்த விவாதம் இந்திய அளவில் பேசப்பட்டது.

தமிழுக்காக வாதாடி இந்தியாவின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யாவிடம் தமிழ் இந்து நாளேட்டின் செய்தியாளர் பேசியபோது…

உங்களைப் பற்றி ?

ஆங்கிலத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிய நான் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி செய்துவருகிறேன்.

இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பேசியவரைப் பகடி செய்ய வேண்டுமென்று ஏன் தோன்றியது?

உண்மையில் அவரைப் பகடி செய்யும் எண்ணத்தில் எழுதத் தொடங்கவில்லை. என் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யவே விரும்பினேன். அவருக்கு மொழி அரசியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லாததால் அந்த உரையாடல் பகடி ஆகிவிட்டது.

ஒருவேளை இந்தியை தேசிய மொழியாக அறிவித்தால் என்ன செய்வீர்கள்?

வெகு காலமாகவே இந்தியை ‘தேசிய மொழி’ என்ற வாசகம் மூலம் பலரையும் நம்ப வைத்திருப்பதை எதிர்க்கிறேன். அந்த வாசகத்தைச் சமூக வலைதளங்களில் யாராவது பயன்படுத்தினால் அதைப் பிழை என்று சுட்டிக்காட்ட ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். இந்தியை ‘தேசிய மொழி’யாக அரசே அறிவித்தால் கோடிக் கணக்கான மக்களோடு சேர்ந்து நானும் அதை எதிர்ப்பேன்.

இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கு உங்களின் தாய்மொழிப் பற்றுதான் காரணமா?

உண்மையில் தமிழ்ப்பற்று என்பதை விடவும் இந்தித் திணிப்பை எதிர்க்கக் காரணம், மொழிச் சிறுபான்மையினருக்கும் இந்திய நாட்டின் பன்முகத்தன்மைக்கும் எதிரான, அநீதியான நடவடிக்கை அது என்பதே. நான் வங்காளியாகவோ மலையாளியாகவோ இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பேன்.

உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் நூல், தமிழ் எழுத்தாளர்?

பள்ளி நாட்களில் கல்கி, சுஜாதாவில் தொடங்கி அசோகமித்திரன், ஜெயகாந்தன் கதைகளுக்கு முன்னேறியிருக்கிறேன். சமீபத்தில் படித்து என்னை மிகவும் ஈர்த்தது ஆர். சூடாமணி எழுதிய ‘இரவுச் சுடர்’ நாவல்.

Leave a Response