மாண்டலின் சீனிவாஸ் நிகழ்வில் பத்திரிகையாளரைப் பெருமைப்படுத்தினார் தேவி ஸ்ரீ பிரசாத்


இசை, நாடகம் உள்ளிட்ட  மேடைநிகழ்ச்சிகளை, பொறுப்பேற்று நடத்தித்தருவதற்காக 2012 ஏப்ரலில் தொடங்கிய நிறுவனம் எஸ்.எஸ். இண்டர் நேஷனல் லைவ் . கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியதோடு, 2014ல் கல்கியின் பொன்னியின் செல்வனை மிக பிரமாண்டமாய் 18 முறை மேடையேற்றிய பெருமையும் இந்த நிறுவனத்துக்கு உண்டு.

இந்நிறுவனம், மறைந்த இசைக்கலைஞர் மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாளான பிப்ரவரி 28ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு, அந்நாளை மிக சிறப்பாக கொண்டாடுவதற்கு நாட்டின் மிக உயரிய கலைஞர்களைக் கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை சென்னை மியூசிக் அகாடமியில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒளி – ஒலி குறுந்தகடை வெளியிட்டு சிறப்பரை ஆற்றுகிறார். இசைஞானி  இளையராஜா, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் நாட்டின் ஒப்பற்ற இசைக் கலைஞர்களான உஸ்தாத் ஜாகிர் உசேன், விக்கு விநாயகராம், அருணா சாய்ராம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், சிவமணி, குனால் கன்ஜாவாலா, மாண்டலின் யு.ராஜேஷ், ரஞ்சித் பரோட், அனில் ஸ்ரீனிவாசன், செல்வகணேஷ், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்டீபன் தேவசி, உமாசங்கர், ஹர்மீத் மற்றும் பலர் தங்களது இசை மூலம் மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸுக்கு மரியாதை செய்கிறார்கள்.

மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸின் ரசிகர்களும், இசை ரசிகர்களும் இந்த அரிய நிகழ்ச்சியை தவறாமல் கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக, எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ் இந்நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம் என்று அறிவித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புக்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, இசையமைப்பாளர்  தேவி ஸ்ரீ பிரசாத், பேசும்போது, இந்த நிகழ்ச்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பல நாட்கள் யோசித்துக்கொண்டிருந்தோம், சரியான பெயர் கிடைக்கவில்லை, இந்நிலையில் என்னைச் சந்தித்த பத்திரிகையாளர் செந்தில்குமரன், சொன்னதுதான் இப்போதுள்ள வடிவமைப்பு அவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி என்றார்.

திரைப்படப்பத்திரிகையாளர்கள் பல்வேறு தருணங்களில், திரைக்கலைஞர்களுக்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். இதுவரை யாரும் வெளிப்படையாக அதைச் சொல்லிப் பாராட்டியதாக இல்லையில்லை சொன்னதாகக்கூடத் தெரியவில்லை. இந்தவிசயத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் உயர்ந்தமனிதராகிவிட்டார்.

Leave a Response