வெள்ளைப்புலி அடேல்பாலசிங்கத்தை வேதனைப்பட வைத்தது யார்?

தேசத்தின்குரல் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘போரும் சமாதானமும்’நூல் தொடர்பாக, வெள்ளைப்புலி என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட  அவரது மனைவி அடேல்பாலசிங்கம் வெலியிட்டுள்ள அறிக்கை,

எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டு, அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் (Fairmax Publishing Ltd) வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ‘போரும் சமாதானமும்’ என்ற தமிழ் நூல் தற்பொழுது இந்தியாவில் ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்றழைக்கப்படும் நிறுவனத்தால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்திற்குமான காப்புரிமையைக் கொண்டவராக விளங்கும் எனது அனுமதியின்றியே இந்நூலை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதையும் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வர விரும்புகின்றேன்.

எனது கணவரால் எழுதப்பட்ட ‘போரும் சமாதானமும்’ தமிழ் நூல் 2005ஆம் ஆண்டு முதற்தடவையாகப் பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட பின்னர் அவ்வாண்டின் இறுதியில் கிளிநொச்சியில் அவரது அனுமதியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்நூல் மீள்பதிப்புச் செய்யப்படவில்லை. அவ்வாறான மீள்பதிப்பை மேற்கொள்வதற்கான அனுமதி எனது கணவர் உயிருடன் இருந்த பொழுது அவராலோ, அன்றி அவரது மறைவுக்குப் பின்னர் அவரது எழுத்தாக்கங்கள் அனைத்திற்குமான காப்புரிமையைக் கொண்டவராக விளங்கும் என்னாலோ எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் எனது அனுமதியின்றி, காப்புரிமை விதிகளுக்கும், புலமைச்சொத்து அறநெறிகளுக்கும், எழுத்துரிமச் சட்டங்களுக்கும் முரணாகத் தன்னிச்சையாக இந்நூலை ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனம் மீள்பிரசுரம் செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. எனது அனுமதியோ அன்றி மேற்பார்வையோ இன்றி இப்பிரசுரத்தை ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனம் மேற்கொண்டிருப்பதால் இதில் தகவல் திரிபுகளும், குழறுபடிகளும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனத்தின் இப்பிரசுரத்தை எனது கணவரின் அதிகாரபூர்வ எழுத்தாக்கமாகக் கருத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு, இந்நூலை விற்பனை செய்வதற்கான உரிமம் என்னால் எந்தவொரு தனிநபருக்குமோ அன்றி நிறுவனத்திற்குமோ வழங்கப்படவில்லை என்பதோடு, அவ்வாறான உரிமை கோரலை எவராவது மேற்கொண்டால் அது உண்மைக்குப் புறம்பானது என்பதையும் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வர விரும்புகின்றேன்.

எனது கணவரால் எழுதப்பட்ட போரும் சமாதானமும், விடுதலை ஆகிய நூல்களும், என்னால் எழுதப்பட்ட சுதந்திர வேட்கை என்ற நூலும் தற்பொழுது பதிப்பில் இல்லை. எதிர்காலத்தில் இந்நூல்களை மீள்பிரசுரம் செய்வதற்கு நான் தீர்மானிக்கும் பட்சத்தில் அவற்றை என்னால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதிப்பகம் ஊடாகவும், உரிய முறைப் படியும், வெளியீட்டு விழா ஒன்றின் மூலமாகவுமே வெளியிடுவேன் என்பதை அறியத் தருகின்றேன்.

இவ்வண்ணம்,

திருமதி அடேல் பாலசிங்கம்

Leave a Response