உதைக்கும் கால்களுக்கு முத்தமா? – பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவினருக்குக் கேள்வி

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கவிருக்கும் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களே உங்கள் மனச்சாட்சியை புறந்தள்ளாமல், சற்றுநேரம் யோசித்துப் பாருங்கள்!

1. காவிரிப் பிரச்சினையில் – தமிழக விவசாயிகள் நலனுக்கும், வளர்ச்சிக்கும் கேடாக, நீண்டகால சட்டப் போராட்டம் எல்லாம் நடத்தி உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க ஆணையிட்டதை அப்பட்டமாகவே ஏற்காமல், வேறு கோணல் வழித் திட்டம் என்று கூறி, கருநாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க தமிழ்நாட்டு நியாயத்தை ‘பலிகடாவாக்கி’யுள்ளதற்குப் பாராட்டும் பரிசும் பா.ஜ.க.வுக்கு அளிப்பதற்காக நீங்கள் வரிசையாக நின்று வாக்களிக்கப் போகிறீர்களா?

2. ‘நீட்’ என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க – பொதுப் பட்டியலில் உள்ள அரசியல் சட்டப்படி தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள சட்டப்படி, எதிர்க்கட்சி தி.மு.க.வும், அதற்கு ஆதரவு தந்து – ஏகமனதாக எதிர்ப்பின்றி நிறைவேற்றி, அனுப்பப்பட்ட சட்ட வரைவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக்கூட அனுப்பாமல் – கடந்த 4, 5 மாதங்களாக கிடப்பில் போட்டு, எந்தக் காரணமும் சொல்லாது – தமிழ்நாட்டுக் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பில் மண்ணைப் போட்டதற்கு கைம்மாறாக நீங்கள் பா.ஜ.க. – மோடி நிறுத்தியுள்ள வேட்பாளரை, தமிழ்நாட்டின் நலனை அடகு வைத்துவிட்டு வாக்களித்து ஆதரவுக் கரம் நீட்ட முன்வரிசையில் நிற்கப் போகிறீர்களா?

3. அண்ணாவின் அரசு 1967 இல் நிறைவேற்றிய இருமொழிக் கொள்கைத் திட்டத்தை குழிதோண்டிப் புதைக்க முன்னுரை எழுதிடும், இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஆதிக்கம், பண்பாட்டுப் படையெடுப்பு இவைகளை நீங்கள் ஏற்று – லட்சியங்களைப் புதைகுழிக்கு அனுப்பிடும் நிலையில், வாக்களிக்கப் போகிறீர்களா?

தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு – உங்கள் ஊழல்களுக்காக மட்டுமல்லாது – தமிழ்நாடு நலன்களையும் இப்படி டில்லியிலும் அடகு வைக்கும் ‘‘பிணைக் கைதிகளைப்போல்’’ ஆகிவிட்ட பரிதாபநிலையை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்!

மனச்சாட்சி துளியளவு இருந்தாலும், கொள்கை உணர்வு எள்மூக்கு முனையளவு இருந்தாலும், நீங்கள் மனசாட்சிப்படி வாக்கெடுப் பில் நடந்துகொள்ளுங்கள் – பழி நீங்கும்!

ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதா இருந்தால்கூட, இவ்வளவு பெரிய விபீடண சரணாகதிப் படலத்தையா நடத்தத் துணிவார்? அதையும் சற்று யோசியுங்கள்!

மனசாட்சிக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டு நலன்காக்க குடியரசுத் தலைவர் – வாக்கெடுப்பு ஒரு நல்வாய்ப்பு – அதனை நழுவ விடாதீர்! சரித்திரப் பழிதான் பின் மிஞ்சும்!

தனிப்பட்ட விருப்பு – வெறுப்பால் அல்ல – தமிழர்களின் திராவிடர் இயக்க ஆட்சியே இல்லாமல் – ‘கழகம் இல்லா ஆட்சி’ என்று பகிரங்கமாகப் பேசுபவர்களின் உதைத்த காலுக்கா இப்படி முத்தம் தருவது?

Leave a Response