அதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் எமது சூழலைப் பாதுகாக்கும் நோக்கில்
அரசியல்வாதிகளுக்குத் தவிர்க்க முடியாது
வடக்கு சுற்றாடல் அமைச்சர்
மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்படவில்லை. அந்தவகையில், மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது என்று சொல்லப்படுகிறது. எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்க முடியாது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தின நிகழ்ச்சி இன்று பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைத்தீவில் நடைபெற்றது. ‘மக்களை இயற்கையோடு இணைத்தல்’ என்னும் கருப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்கள் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணசபைகளுக்கும் பொதுவான ஒழுங்கு நிரலில் இடம்பெறுகிறது. இதற்கு, பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் சுற்றுச்சூழல் விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது.
மாகாணசபை முறைமை, இலங்கையில் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக, இரத்தம் சிந்திய ஆயுதப்போராட்டத்தின் விளைவாகத் தரப்பட்ட ஒரு தீர்வு. இதற்கு அதிகாரங்கள் இல்லை என்பது எங்களுக்குத் தெளிவாகவே தெரியும். ஆனால், எமது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கும் அதிகாரங்களைப் பெறுவதற்குமான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாகவே மாகாணசபையை ஏற்றுக்கொண்டோம்.
அதிகாரங்களுக்காகப் போராடிய இனம் நாம். அதிகாரிகளுக்கு சுற்றுநிருபங்களை மீறிச் செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால் எமது இயற்கை வளங்கள் அபிவிருத்தி என்ற பெயரால் சுரண்டப்படும்போது அரசியல்வாதிகள் சுற்றுநிருபங்களுக்குக் கட்டுப்பட்டு, அதிகாரங்கள் இல்லை என்று சொல்லிவிட்டுக் கண்டும் காணாமல் இருக்க முடியாது.
சுற்றுச்சூழல் பாதிப்பு என்று நிராகரிக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்த விழைந்தவர்கள், தங்கள் எண்ணம் ஈடேறவில்லை என்ற காரணத்துக்காகக் குற்றம் சாட்டலாம். எங்கள் எல்லோரையும்விட எமது சூழல் முக்கியம். நாம் மட்டுமல்லாமல், அடுத்த சந்ததிகள் வாழுவதற்காகவும் அதிகாரங்கள் இல்லாத விடயங்களாக இருந்தாலும், உரிமைகளைக் கேட்டுப் போராடும் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் அவற்றைக் கையில் எடுப்பது தவிர்க்க இயலாதது என்றும் தெரிவித்துள்ளார்.