
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இனி அது கைவிடப்படும். இதே நடைமுறை மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என தேர்வு பெறும்போது, மற்ற மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடைமுறை கைவிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் பின்னணியில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயசந்திரன் இருக்கிறார் என்பதால் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
எழுத்தாளர் வா.மணிகண்டன் – பனிரெண்டாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் இனி ரேங்க் பெற்றவர்களின் பெயர் வெளியிடப்படாது என்று அறிவித்திருக்கும் மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களுக்கும் , மரியாதைக்குரிய கல்வித்துறைச் செயலர் அவர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். கல்வி நிறுவனங்களிடையே நிலவும் மதிப்பெண் சார்ந்த கீழ்த்தரமான போட்டிக்கு எதிராக உருட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய தடைக்கல் இது.
எழுத்தாளர் ரவிக்குமார் – துணிச்சலான புதுமையான அறிவிப்பு! பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு உதயசந்திரன் IAS இன்னும் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.
எழுத்தாளர் கலைவேலு – பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. வழக்கம்போல் தேர்ச்சி விழுக்காடு உயர்ந்துள்ளது; மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி விழுக்காடு கூடுதலாக உள்ளது. ஆனால் தொலைக்காட்சிகளில் மாநில முதல் மாணவர், மாணவரின் பெற்றோர், மாணவரின் பள்ளி, அவர்களின் பேட்டி என அமளி துமளி பறக்குமே அவை எதுவும் இவ்வாண்டு இல்லை. ஆர்ப்பாட்டம் ஆரவாரம் இல்லாமல் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இதற்காகக் கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களையும், துறைச்செயலர் திரு. உதயசந்திரன் அவர்களையும் தொடர்புடைய அதிகாரிகளையும் பாராட்டியே ஆக வேண்டும்.
இவ்வாண்டு முதல் பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் பெயரோ, பள்ளிப் பெயரோ அறிவிக்கப்படாது என்ற அரசு ஆணை சரியான திசை நோக்கிய வலுவான முதல் அடி. அதேபோல் தமிழ்வழிக்கல்வியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்குக் கலவி உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வாழ்த்தி வரவேற்கத் தக்கது. இச்சிறப்பிடம் வெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து முடிவு செய்யப்படமாட்டது என்ற உதயசந்திரன் விளக்கம் தமிழ்நாட்டுக் கல்வியில் புதிய வெளிச்சம் பாய்ச்சும்.
இயக்குநர் கவிதாபாரதி – கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் அறிவுள்ள நேர்மையான அதிகாரி.. அவர் நன்நோக்கோடு பரிந்துரைத்திருப்பார்.. அதன் விபரீதம் புரியாமல் அமைச்சரும்,அரசும் ஒப்புதல் அளித்திருக்கலாம்..
மணற்கொள்ளை மாபியாவை விடவும் கல்விக்கொள்ளை மாபியா சர்வ பலம் வாய்ந்தது.. அவர்கள் கல்லாக் கட்டுவதில் சிறு பின்னடைவு ஏற்படுவதைக்கூட இந்த அரசு அனுமதிக்காது.. இதன் உள்குத்து என்ன என்பதை ஆராய வேண்டும்..
ஒருவேளை இது கல்வித் திருடர்களுக்கு பாதிப்புத்தான் எனில் இந்த உத்தரவு திரும்பப் பெறப்படும்.. உதயச்சந்திரன் மாற்றப்படுவார்.


