தலைவர் நான்தான் ஆனால் எனக்கு அதிகாரம் இல்லை – இந்தித்திணிப்பு பற்றி ப.சிதம்பரம் விளக்கம்

குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர், இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால், தங்களது உரையையும், அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளலாம்.

அனைத்து இந்திய விமானங்களிலும் இந்தி, அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பதும், செய்தித் தாள்கள் உள்ளிட்ட இதழ்களில் பாதி இந்தி மொழி சார்ந்ததாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஏர் இந்தியா, பவன் கன்ஸ் ஹெலிகாப்டர் பயண டிக்கெட்டுகளில் இந்தி பிரதானமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை தீவிர கவனம் செலுத்தி, இந்தி மொழியை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பரிந்துரைகளுக்கு, மார்ச் 31-2017 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியா முழுக்க தீவிர இந்தித்திணிப்பில் ஈடுபட்டுள்ள மோடி அரசு, காங்கிரசு ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை முகமூடியாக அணிந்துகொண்டு இக்கொடும் செயலைச் செய்துள்ளது.

இதற்கு இந்தியா முழுக்க கடும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அக்குழுவின் தலைவராக இருந்த ப.சிதம்பரம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து ஆட்சிமொழிக்கான குழுவில் இந்தி பேசுவோரே பெரும்பான்மையாக இருந்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.

அவருடைய அறிக்கையில்,

ஆட்சிமொழிக்கான பாராளுமன்ற குழு தொடர்பாக சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். ஆட்சிமொழிக்கான பாராளுமன்ற குழுவின் அலுவல் சார்ந்த தலைவராக உள்துறை மந்திரி இருப்பார். துணைத்தலைவராக சத்யவிராட் சதுர்வேதி எம்.பி. இருந்தார். இந்த குழுவில் உள்ள 30 பேரில் 28 பேர் இந்தி பேசுபவர்கள் அல்லது இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

அனைவருமே இந்தி நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள் என்றே கருதலாம். அவர்கள் 3 துணை குழுக்களாக பிரிந்து இருப்பார்கள். சதுர்வேதி எம்.பி. தலைமையிலேயே ஆதாரம் மற்றும் மசோதாக்கள் மீதான வரைவு நடந்தது. இதுதொடர்பான அறிக்கை துணை குழுக்களால் தயாரிக்கப்பட்டு, ஆட்சிமொழிக்கான பாராளுமன்ற குழுவால் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆட்சிமொழிக்கான பாராளுமன்ற குழு மற்றும் துணை குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் இந்தியிலேயே நடந்தது. குழுக்களில் பெரும்பான்மையானோர் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டனர். இந்த சூழலில் அலுவல் சார்ந்த தலைவர் என்ற முறையில் சிறிய மாற்றங்களை கூட செய்யமுடியாது. அதிக பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில், அதனை நிராகரிப்பதற்கு அலுவல் சார்ந்த தலைவருக்கு அதிகாரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response