புலிகள், தத்துவார்த்த ரீதியான, செம்மையான போராட்டம் நடத்தினார்கள் – தீபச்செல்வன் திட்டவட்டம்

ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப்போர், இனப்படுகொலைக்குப் பிறகு பௌத்த சிங்கள இனவெறி இராணுவம் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகளைத் தம் உயிரையும் பொருட்படுத்தாது உலகறியச் செய்தவர். 2009 இல் யாழ் பல்கலையில் மாணவர் ஒன்றிய பொதுச்செயலாளராய் இருந்தபோதும் சரி, எழுத்துலகில் எழுத நுழைந்தபோதும் சரி தமக்குள் சமரசமில்லாமல் களப்போராளிக்கு நிகராக தீவிரமாய் இயங்கியவர் – இயங்கி வருபவர். அந்தவகையில் இவரின் ‘பதுக்குக்குழியில் பிறந்த குழந்தை’ கவிதைத் தொகுப்பு அனைவரிடமும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய ஒன்று. அதனைத் தொடர்ந்து கவிதை, கட்டுரை, நேர்காணல் என பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகான ஈழம் பற்றியே பேசுபொருளாகக் கொண்டவை.

பெரும்பாலும் கவிஞராகவே அறியப்படும் இவர், 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பேரா.கைலாசபதியின் நினைவாக இலங்கை பத்திரிக்கை நிறுவனத்;தின் சிறந்த ஊடக வியலாளருக்கான இரு விருதுகள், 2010 –ஆம் ஆண்டில் சிறந்த கவிஞருக்கான ‘கணையாழி ஆண்டாள் நினைவு விருது’, 2010 –ஆம் ஆண்டில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் சிறந்த புகைப்பட ஊடகவியலாளருக்கான விருதும் பெற்றார். இன்று ‘உலகத் தரமான ஓர் உன்னதக் கவிஞனாய்’ நம்மிடையே விளங்கும் தீபச்செல்வனைப் பற்றிய நூலுக்காக மின்னஞ்சலினூடாக எடுக்கப்பட்டு தீராநதியில் வெளியான நேர்க்காணலில் ஒரு பகுதி….

ஈழ விடுதலையில் ஆயுதப் போராட்ட அளவிற்கு தத்துவார்த்த ரீதியானவை முன்னெடுக்கப்பட்டவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே அதை தாங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தோல்வி ஏற்பட்டு விட்டது என்று கருதினால் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம். தத்துவார்த்தமான – கொள்கை ரீதியாக செம்மையான ஒரு போராட்டம் என்பதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அபாரமான வளர்ச்சி, உலக நாடுகளை ஈர்த்த விதம் போன்றவை சீரிய கொள்கையுள்ள ஒரு அமைப்பால் மாத்திரமே எட்டமுடியும். விடுதலைப் போராட்டம் உலகை பாதிக்கத்தக்க ஈர்க்கத்தக்க ஒரு போராட்டமாக இருந்தது. அப்படியொரு போராட்டத்தை உலகம் விரும்பாது. அதனாலேயே எங்கள் போராட்டத்தை உலகமே சேர்ந்து நசுக்கியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போராட்டம் முடிவற்றது. ஒடுக்குமறை உள்ளவரை தொடரும் என்றே கருதுகிறேன். எப்போது என்ன வடிவத்தில் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும். சீரிய தத்துவார்த்தமான போராட்டம் ஒன்றினாலே இது சாத்தியமானது.

இறுதிக்கட்டப் போர், அதற்குப் பின்னாக நடக்கும் விடயங்கள் தொடர்பாக எழுதி வரும் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து தாங்கள் எவ்வாறு வேறுபடுவதாக உணர்கிறீர்கள்?

இப்போதுதான் மிக நெருக்கடியான கால கட்டம். ஈழத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்ற பல இன அழிப்புச் செயல்களுக்கு இலக்கியவாதிகளே துணைபோகின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. புலிகள் இயக்கத்தை போஸ்மோட்டம் செய்ய வேண்டும் என்று கொச்சைப்படுத்துபவர்களை நான் எதிர்க்க தயங்குவதில்லை. ஆனால் அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் இந்த எழுத்தாளர்களை எதிர்க்க பலருக்கும் பயம். அவர்களது அங்கீகாரம் தேவை என்பதும் அந்த பயத்திற்கு காரணம். எல்லாமும் சரியாகிவிட்டது என்று இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கையிலும் சில இலக்கியவாதிகள் ஈடுபடுகின்றனர். அவர்களை எதற்கும் அஞ்சாமல் எதிர்தரப்பில் நின்று எதிர்க்கிறேன். ஈழத்தில் மௌனமாய் வாழும் எழுத்தாளர் பலருண்டு. நான் மௌனமாய் மனச்சாட்யோடு வாழும் எழுத்தாளர்களின் பக்கம் இருக்கிறேன். விடுதலைக்காக தேசத்தின் விடியலுக்காக ஒடுக்கப்பட்ட எங்கள் சனங்களுக்காக எதையும் சுமக்கும் எதனையும் எதிர்கொள்ளும் எழுத்தாளர்களின் பக்கம் இருக்கிறேன்.

Leave a Response