
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அவர்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இருவரின் குடுமியுமே பா.ஜ.க விடம் தான் உள்ளது. எனவே இருவரையும் அகற்றுவோம். தி.மு.க வை வரவேற்போம் அல்லது ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தலை நடத்தச் சொல்வோம் என்ற பொருளில் பல தி.மு.க ஆதரவுத் தோழர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க வை அதிமுக வின் இரண்டு குழுக்களும் மீறும் நிலையில் இல்லை என்பது உண்மைதான். அதிமுக குழுக்கள் மட்டுமல்ல. தி.மு.க வும் அந்த நிலையில் தான் உள்ளது. “பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க உள்ளது” என சசிகலா குற்றச்சாட்டு வைக்கிறார். அவரால் பா.ஜ.க வைக் குறிப்பிட முடியவில்லை. அதே சமயம், தி.மு.க வும் அதன் பதிலாக, “தி.மு.க பின்னணியில் இல்லை. பா.ஜ.க தான் பன்னீர்செல்வத்துக்குப் பின்னணியாக இருக்கிறது” என்று இதுவரை துணிச்சலுடன் கூறமுடியவில்லையே?
பா.ஜ.க விடம் அனைவரின் குடுமியும் இருந்தாலும், பார்ப்பனக்குடுமிகள் யாரை நம்புகிறது என்பதை வைத்துத்தான் நாம் நமது நிலைப்பாட்டை எடுக்க முடியும். பா.ஜ.க, அதை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ், அதன் காவிப்பரிவாரங்கள், அந்தப் பரிவாரங்களை இயக்கும் பார்ப்பனர்கள் என அனைவருமே மலையாக நம்புவது பன்னீர்செல்வம் அவர்களைத் தான்.
கொல்லைப்புற வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பது பா.ஜ.க வாக இருந்தாலும், தி.மு.க வாக இருந்தாலும், அ.தி.மு.க வாக இருந்தாலும் அது தவறுதான். இப்போது நாம் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆட்சிக்கலைப்பு என்ற கருவியை பா.ஜ.க விற்குத் தூக்கிக்கொடுத்தால், அந்தக் கருவி மீண்டும் ஒருமுறை நம்மைத் தாக்கவும் பயன்படும். பூமராங் ஆக நம்மையும் அது மீண்டும் பதம் பார்க்கும். இந்நிலையில் தி.மு.க துணிச்சலுடன் காவிக்கும்பலையும், அதன் முகமூடியான பன்னீர்செல்வம் அவர்களையும் அகற்றத் துணைபுரிவதே “தி.மு.க ஒரு திராவிட இயக்கம்” என்று சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கும்.
