செத்தா போயிடுவீங்க என்று சிலர் செத்த பிறகும் கேட்கிறார்கள் ஜியோ லும்பன்கள் – கவிதாபாரதி ஆவேசம்

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த கணத்திலிருந்து நாட்டில் பெருத்த அவலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மக்கள் தொகையில் எண்பது விழுக்காட்டுக்கு மேல் இருக்கும மத்திய மற்றும் அடித்தட்டு மக்கள் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். சமுக வலைதளங்களில் உள்ள 99 விழுக்காட்டினர் இதுகுறித்து கடும் எதிர்வினைகள் ஆற்றிவருகின்றனர்.

இயக்குநர் கவிதாபாரதி எழுதியுள்ள பதிவில்,

கையிலுள்ள பணத்தை மாற்ற முடியாதது குறித்தும், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாதது குறித்தும் நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்..

விளைபொருளை விற்கமுடியாத சிறு, குறு விவசாயிகள், வேலையிழந்த உதிரித் தொழிலாளிகள், நடைபாதை வியாபாரிகளின் துயரத்தை எண்ணிப் பாருங்கள், அவர்களின் வருமானம் முடக்கப்பட்டுவிட்டது.. அவர்களிடம் பணமில்லை.. இதிலிருந்து மீள வழியுமில்லை..

மக்கள் தொகையில் முக்கால் பங்கிருக்கிற இவர்களை ஏளனம் செய்வதுபோல் ஊழல் செய்தவர்கள் தெருவில் நிற்கிறார்கள் என்கிறார் பிரதமர்.. நடைமுறைத்தீர்வு காணாமல் நாள் கணக்குசொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள்..

தானியங்கி இயந்திரத்திற்குள் அடங்காத வடிவில் பணத்தை வெளியிடுகிறது நிதியமைச்சகம்..
ஆயிரம், ஐநூறைத் தடை செய்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் தாள் வெளியிடப்படுகிறது..
சில்லறைத் தட்டுப்பாட்டால் நடைமுறையில் அதுவும் செல்லாத நோட்டாகிறது..

பதுக்கல் பணத்துக்காரர்கள் கமுக்கமாக மாற்றிக் கொள்கிறார்கள்.. உழைத்துச் சேர்த்த காசு ஒரு அறிவிப்பால் செல்லாக்காசாக்கப்பட்டு சாபம் பெற்றவர்களாய் சாமான்யர்கள் அலைகிறார்கள்..

நாட்டுக்காக கஷ்டப்பட்டா செத்தா போயிடுவீங்க என்று அங்கங்கே சிலர் செத்த பிறகும் கேட்கிறார்கள் நியோ லும்பன்கள்.. காசில்லையென்றால் கடனட்டையை எடுத்துக்கொண்டு ரிலையன்சுக்குப் போங்கள் என்று கூச்சமின்றி அதிகார ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள் ஊடக அறிவுஜீவிகள்..

இப்படியாக கருப்புப்பண வேட்டை என்னும் மோடியின்
போலி அவதாரம் மிக மோசமாக அம்பலப்பட்டுவிட்டது.. இந்துக்களின் ரட்சகன், பெரும்பான்மை இந்துக்களை தெருவில் அலையவிட்டுவிட்டு பெருமுதலாளிகளின் குலதெய்வமாகிவிட்டார்..

இந்த செயற்கைப் பஞ்சத்தையும், பொருளாதார அசமநிலையையும் சரி செய்வதற்கான எந்தத்திட்டமும் இந்த அரசிடம் இல்லை..
இதே நிலை நீடித்தால் அது எளிய மக்களின் மேல் அபாயகரமான தாக்கத்தை உருவாக்கும்..
அரசு இயந்திரம் அவர்களை வன்முறையால் அடக்கும்.. ஊடகங்கள் உண்மையை மறைத்து அவதார புருஷனின் வரவைக் கொண்டாடும்..

இப்போது இருப்பதாக நம்பப்படும் பொது அமைதி முற்றிலுமாக சீர்குலையும்.. தங்கள் மீதான மக்களின் கோபத்தைத் திசை திருப்ப இன.மத மோதல்களை அரசே உருவாக்கும்..
போர்வரப்போவதாக பூச்சாண்டி காட்டி தேசபக்திக்கு வயாகரா ஊட்டப்படும்..

நம்மைப்போன்ற பொம்மைப்போராளிகள்கூட நாசசக்திக்களாக சித்தரிக்கப்பட்டு முடக்கப்படுவோம்.. ஆட்சிக்கு ஆதரவானவர்களுக்கு கட்டற்ற சுதந்திரம்வழங்கப்படும்..

உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்…
மக்களைக் கொடுந்துயருக்குள்ளாக்கிய
எல்லா பாசிஸ்ட்களும் இப்படியான அறிகுறிகளுடன்தான் உருவானார்கள்

இவ்வாறு எச்சரித்திருக்கிறார் கவிதாபாரதி.

Leave a Response