
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர்.
அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகியிருக்கும் இவர், அங்குள்ள 50 மாகாணங்களில் 270 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றால் அதிபர் பதவி என்ற நிலையில், டொனால்டு ட்ரம்ப் 279 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 218 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்பவானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி உள்ளார்.
டொனால்ட் ஜான் டிரம்ப் என்பதுதான் அவருடைய முழுப் பெயர். 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 69 வயது.நியூயார்க் நகரத்தில் ஒரு பெரிய வர்த்தகப் புள்ளிக்கு மகனாக பிறந்தவர். அரசியல் வாசனை இன்றி வளர்க்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க் சிட்டியில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான இளங்கலை பட்டப்படிப்பை 1968ம் ஆண்டு படித்து முடித்தார்.
பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம், டிரம்ப் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி.)
டொனால்ட் டிரம்ப், தனது தந்தையின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவர். தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் பதினாரடி பாய்கிற மாதிரி அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மிகப் பெரிதாக வளர்த்தெடுத்தவர். இன்று அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்து வருகிறார் ட்ரம்ப்.
‘நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவேன். ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள அணு ஒப்பந்தம் என்னும் பேரழிவை உடனடியாக ரத்து செய்வேன். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட சவுதி ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் அமெரிக்க அதிபரான பிறகு சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவேன்’ என பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொஞ்சமும் தயங்காமலும் யோசிக்காமலும் தினமும் சொல்லி வந்தவர் ட்ரம்ப்.
இதுமட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பு பற்றிய பிரசாரம் அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை தெரிந்துகொண்ட டொனால்ட் டிரம்ப் அது பற்றியும் பேசி மாட்டிக் கொண்டார்.
“இந்தியா, சீனா, ஜப்பான், மெக்சிகோ போன்ற நாடுகள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை மீட்டு, அமெரிக்க மக்களுக்கு வழங்குவேன். மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லைச் சுவர் எழுப்புவேன்’’ என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
பல இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவந்த டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
‘முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள். பின்னர் உன்னோடு சண்டையிடு வார்கள். கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று காந்தியின் பொன்மொழி என்று தவறாக குறிப்பிட்டு பேசினார். யாரோ சொன்னதை எல்லாம் காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என இவரை கிண்டலடித்து, கேலி செய்து விட்டனர் நெட்டிசன்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல் செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வந்தனர். இதில் தொழிலதிபர்கள் பலரும் பெரும் தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். இந்த நிலையில், தமது சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்தவர்தான் டொனால்ட் டிரம்ப்.
நன்கொடை அளிப்பவர்கள், பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். அதனால் சொந்த செலவிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறேன். தேர்தலில் ரூ.6,500 கோடி செலவானாலும் அதற்கு தாம் தயார் என கூறியவர்தான் டொனால்ட் டிரம்ப்.
