
திரைப்படத் தயாரிப்பாளர் மதன் மற்றும் எஸ் ஆர் எம் கல்விக்குழுமத் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கும் இடையே வழக்கு இருக்கிறது. இருவரில் யார் சரி, யார் தவறு என்பது வழக்கு விசாரணை போகப்போகத் தெரியும். இந்நிலையில் அவசரமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அறிக்கையொன்றைக் கொடுத்தனர். அதில்,
பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணைய தளம் மற்றும் அனைத்து ஊடக
சகோதர சகோதரிகளுக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாகவும் அன்பான
வணக்கங்கள்.
உங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கும், சமூக தலைவர்களுக்கும்,
அரசியலமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மற்றும் அனைத்து பிரிவினருக்கும்
நாங்கள் ஒரு செய்தியை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.
SRM குழுமத்தின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்களின் மீது சமீக
காலமாக சில தவறான கருத்துக்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.
திரு.பாரிவேந்தர் அவர்கள் எங்களை பொறுத்த வரையில் கருணை உள்ளமும்,
வள்ளல் குணமும் கொண்டவர்.
அவர் எங்களது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தை
சேர்ந்த தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கும், எங்களது இயக்குநர்கள்
சங்கத்தை சேர்ந்த 2500 உறுப்பினர்களுக்கும் மற்றும் அவர்களது அம்மா, அப்பா,
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச
மருத்துவ சிகிச்சைகள் அளிக்கிறார்.
இதய அறுவை சிகிச்சை, மாற்று சிறுநீரக சிகிச்சை, மூளை சம்பந்தப்பட்ட
அனைத்து சிகிச்சைகள் உட்பட பல சிகிச்சைகளுடன் மாத்திரை மருந்துகளையும்
இலவசமாக அளிக்கிறார்.
அத்துடன் நோயாளியுடன் மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கும்
உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக அளிக்கிறார். இதன் மூலம் பல கோடி
ரூபாய் பெறுமான உதவிகளை கருணை உள்ளத்தோடு திரைப்படத்
துறையினருக்கும் எந்த விதமான பிரதிபலனையும் எதிர் பாராமல் தொடர்ந்து
உதவிகள் செய்து வருகிறார்.
இத்துடன் வருடா வருடம் எங்கள் சங்க உறுப்பினர்கள் வாரிசுகளுக்கு
அவரது SRM கல்லூரியில் பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான
இலவச சீட்டுகள் கொடுத்து உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
எனவே, இதுபோன்ற பல நற்பணிகளை செய்து வருகின்ற
திரு.பாரிவேந்தரைப் பற்றி வரும் செய்திகள் தவறாக இருக்கும் என்று நாங்கள்
கருதுகிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கிற நேரத்தில் திரைப்பட அமைப்புகள் இவ்வாறு ஒருவருக்கு ஆதரவாகப் பேசியிருப்பது பல்வேறு விமரிசனங்களை எழுப்பியிருக்கிறது.பாரிவேந்தருக்கு ஆதரவாக விக்ரமன் உள்ளிட்டோர் பொங்குவது எதனால்? பொதுமக்களிடம் அநியாயமாகப் பணம் பிடுங்கி அதில் சிறு பகுதியை உதவி என்று செய்துவிட்டால் ஒருவர் நல்லவராகிவிடுவாரா? படைப்பாளிகள் இவ்வளவு சுயநலக்காரர்களா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
