
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் என்.இளையராஜாவை,சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் கைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது,தான் கருத்துக் கணிப்பு நிறுவனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வருவதாகவும்,முக்கிய அரசியல்கட்சியைச் சேர்ந்த சிலரின் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.வேறு பணியில் இருப்பதாகக் கூறி இளையராஜா அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார்.
அதன்பின்னரும் மீண்டும் தொடர்பு கொண்ட கூறப்படும் திருநாவுக்கரசு,தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும்,அந்த தீர்மானத்தின் மீதான
வாக்கெடுப்பின்போது தாங்கள் சொல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
அதற்கு பிரதிபலனாக ரூ.35 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசை வார்த்தை கூறியதாகவும்,அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்தபோது,இந்த விவகாரம் குறித்து வெளியில் கூறினால் உங்களுக்கும்,உங்கள்
குடும்பத்தினருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்ததாகவும் ஜூன் மாதம் 29 ஆம் தேதி,
இளையராஜா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார்.
அதில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான என்னை சட்டவிரோதமாகச் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததுடன்,இலஞ்சம் வழங்க முன்வந்தும்,உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில்,திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
கைபேசி அழைப்பு விவரங்கள்,தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு,திருச்சியைச் சேர்ந்த நரேஷ்,சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த
தியாகராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி,3 பேரையும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில்,கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45),அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.இருவரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இவர்கள் திமுக பிரமுகர்கள் என்றும்,முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்றும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில்,செந்தில் பாலாஜியின்
சகோதரர் அசோக்குமார்,இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்தது தெரியவந்துள்ளது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி குறித்து திமுக தரப்பினர் கூறுவதாவது…
விஜய் குதிரைபேரத்தில் ஈடுபட்டார் என்பதை வைகோ வாக்குமூலமாகவே கொடுத்திருக்கிறார்.அதனடிப்படையில் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதோடு,நேற்று முன்தினம் கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன் பதவியைத் துறந்துவிட்டு தவெகவில் இணைகிறார்.எனவே அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது.அதற்கு முன்பாக செந்தில்பாலாஜியை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைத்து அமைதிப்படுத்தியாக வேண்டும் இல்லையெனில் கரூரில் திமுக வென்றுவிடும் என்பதாலேயே இப்படியெல்லாம் நடக்கின்றன.கைதானவர்களை வலுக்கட்டாயமாக செந்தில்பாலாஜியுடன் தொடர்புபடுத்துகிறார்கள்.ஏனெனில் செந்தில்பாலாஜியைப் பார்த்து அவ்வளவு பயம் என்று சொல்கிறார்கள்.


