யாராவது வந்து திமுக மேல் புகார் கொடுங்கள் – வருந்தி அழைக்கும் அமைச்சர்

பொதுப்பணித்துறை மற்றும்நெடுஞ்சாலைத்துறையில் பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களை அதிகாரத்தில் இருந்தவர்கள்,அவர்களின் குடும்ப உறவுகள்,அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி கொடுத்து பணத்தையும் பெற்றுக்கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ,பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம்.என்னிடம் நேரடியாகவோ அல்லது minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம்.புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படுவதுடன்,அவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும்.

விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில்,இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது.ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் வந்து புகார் கொடுங்கள் என்று ஓர் அமைச்சர் வெளிப்படையாக அறிக்கை விட்டிருப்பது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் ஆட்சி மாறியதும் அவர்களே வந்து புகார் கொடுத்திருப்பார்கள்.அப்படி யாரும் இல்லையென்று தெரிகிறது.இருந்தாலும் அப்படி நடந்தது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

Leave a Response