
மதுரை மாவட்டம்,மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி ‘போதையில்லாத மேலூர்,பெண்கள் பாதுகாப்பு’ என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு தவெக மற்றும் காங்கிரசுக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாரத்தான் போட்டி தொடங்கியது.4 பிரிவுகளாக சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்காக நடந்த இந்தப்போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக,கறுப்பு டி சட்டை அணிந்து அமைச்சர் விசுவநாதன் விழா மேடைக்கு வந்தார்.அங்கு திரண்டிருந்த தவெகவினர்,முதல்வர் விஜய் நடித்த ‘சச்சின்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாடி வாடி கைப்படாத சிடி’ எனும் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர்.இதைப்பார்த்த அமைச்சரும் மேடையிலேயே தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் உற்சாகமாகக் குத்தாட்டம் போட்டார்.
இதை தவெக மற்றும் காங்கிரசு கட்சியினர் படம்பிடித்து புலரி உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தமிழக உயர்கல்விக்குப் பொறுப்பான ஓர் அமைச்சரே முதல்வரின் பாடலுக்கு தவெகவினருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இது சர்ச்சையான நிலையில்,இது குறித்து அமைச்சரிடம் கேட்டபோது,முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில்,அங்கு இருந்த இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து நடனமாட அழைத்தனர்.அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து நடனம் ஆடினேன்.இதில் தவறு எதுவும் இல்லை என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் விசுவநாதன் கூறினார்.


