தூய்மைப்பணியாளர் சிக்கலில் திமுக அரசு வழியில் தவெக அரசு – மு.வீ எதிர்ப்பு

இந்திய பொதுவுடைமைக் கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்,நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்நாட்டில் தாம்பரம்,ஆவடி,ஓசூர்,வேலூர்,கோவை,ஈரோடு,சேலம்,திருப்பூர்,மதுரை,தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப்பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டுவருபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளில் பொதுசுகாதாரம் என்பதில் தூய்மைப்பணி மிகவும் இன்றியமையா நிரந்தரப்பணியாகும்.

சாதிச்சார்பு சமூகஅமைப்பில்,தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் அடித்தட்டு உழைக்கும் மக்களை,பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்,ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித உரிமைகளும் பெறமுடியாத சூழலில் பணியமர்த்துவது சமூகநீதிக் கொள்கைக்கு முரணானதாகும்.

தனியார் நிறுவனங்கள் தூய்மைப் பணியாளர்களைச் சட்டபூர்வமாக சுரண்டிக் கொழுக்க முந்தைய ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்ட ஒப்பந்தமுறைச் சுரண்டலுக்கு,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது.போராட்டங்களை முன்னெடுதத்தது. இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராடின.ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் தனியார்மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கையை புறக்கணித்தனர்.தற்போதைய புதிய அரசு தனியார் மயமாக்கலுக்கு முடிவுகட்டவேண்டும்.தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களைப் படிப்படியாக அந்தப்பணியில் இருந்து விடுவித்து,மாற்றுப்பணிகளை வழங்குவதும்,தூய்மைப்பணியில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதும்,எந்திரமயமாக்குவதும் அவசியமாகும்.

தமிழ்நாட்டிலும்,நாட்டின் பிறபகுதிகளிலும்,தூய்மைப்பணியை தலைமுறை,தலைமுறையாக குறிப்பிட்ட சமூகப்பிரிவினரின் குலத்தொழிலாகக் கருதும் பிற்போக்குக் கண்ணோட்டத்தைத் தகர்க்கவேண்டும்.

தூய்மைப் பணியாளர்களின் குடும்பப் பொருளாதார நிலைமைகள்,இந்த தொழில்பிரிவுக்குள்ளேயே ஒடுங்கி வாழும் செக்குமாட்டு வாழ்க்கைமுறைக்கு அவர்களை நெட்டித் தள்ளிவருகிறது.

பட்டியல் சாதியினர் நலன் பேணும் சிறப்பு உட்கூறு நிதியும் வேறுதிட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது அல்லது செலவு செய்யப்படாமல் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.இது அரசுக் கட்டமைப்பில் நிலவும் சாதி ஆணவ சார்பு மனநிலையை வெளிப்படுத்துகிறது.

இந்தச்சூழலில் மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடவேண்டும்.ஏற்கனவே,தற்காலிகமுறை,ஒப்பந்தமுறையில் பணிபுரியும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணிப்பாதுகாப்பு,பணி நிரந்தரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதார பாதுகாப்பு வழங்கிடவேண்டும்.

தூய்மைப் பணியாளர்கள் நியமனம்,நிர்வாகம் அனைத்தும் அரசின் நேரடிப்பொறுப்பில் மட்டுமே இருக்கவேண்டும். இந்த அத்தியாவசியச் சேவையை,எந்தநிலையிலும் தனியார் கையில் ஒப்படைக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response