தவெக கூட்டணி அரசில் பாமக? – புதிய தகவல்

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….

முதல்வரைச் சந்தித்து தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டும்.இதற்கான அறிவிப்பை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் வெளியிடவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

கடந்தவாரம் என் தலைமையில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்காக அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.42 தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.அதில்,69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.99 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர் காலத்தில் நடைபெற்ற சாதிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகளை வைத்துதான் இடஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது.இந்த பழையதரவுகள் போதுமானது இல்லை,இதை ஏற்கமாட்டோம்.உச்சநீதிமன்றமும்,உயர்நீதிமன்றங்களும் பலமுறை கூறிய நிலையில்,புதிதாக தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றினோம்.அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சார்பில் முதல்வரை இன்று சந்தித்தேன்.

தவெக தேர்தல் அறிக்கையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளனர்.எனவே தமிழகஅரசு உடனடியாக அதற்கான பணிகளைத் தொடங்கவேண்டும்.மத்திய அரசு நடத்துவது தலைகளை எண்ணும் பெரிய அளவிலான கணக்கெடுப்பு.மாநில அரசு எடுத்தால்தான் தமிழகத்தில் உள்ள இரண்டேகால் கோடி குடும்பங்களின் சமூக,பொருளாதார,கல்வி குறித்த துல்லியமான நிலையைக் கண்டறியலாம்.பல மாநிலங்கள் இந்தக் கணக்கெடுப்பை எடுத்துள்ளனர்.எங்களின் கோரிக்கையை முதல்வர் கவனமாகக் கேட்டுக்கொண்டார். நிச்சயமாக,உறுதியாக இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக நல்லசெய்தியை முதல்வர் கூறியுள்ளார்.ஆளுநர் உரையில் இதனை கொள்கைமுடிவாக அரசு அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

முதல்வரிடம் 25 நிமிடங்கள் பேசி சமூகநீதி,சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான முழுவரலாற்றையும் அவரிடம் எடுத்துரைத்தோம்.

69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.என் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் 99 விழுக்காடு கட்சிகள் கலந்துகொண்டன.தவெகவின் பிரதிநிதியும் அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.எனவே இந்தக் கணக்கெடுப்பை முதல்வர் நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

பிகாரில் இதுபோல கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,96 இலட்சம் குடும்பங்களுக்கு மாத வருமானம் 6 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ 2 இலட்சம் உதவி வழங்கப்பட்டது.67 இலட்சம் குடும்பங்களுக்கு வீடு இல்லை என்பது கண்டறியப்பட்டு,அவர்களுக்கு பீகாரில் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன.அதுபோல துல்லியமான கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்தப்பட்டால் சமூகநலத்திட்டங்களை நிறைவேற்ற எளிதாக இருக்கும்.சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த 700 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும்.

தவெக அரசு அமைந்து ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில்,அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது.நிறைய மாற்றங்கள் வந்துள்ளன.ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது.அரசு மாறினாலும்,அதிகாரிகள் இன்னும் மாறவில்லை.அதற்கு காலஅவகாசம் கொடுக்கவேண்டும்.ஒரு மாதத்தில் எல்லாமே செய்யவேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு புதிய மின்உற்பத்தித் திட்டத்தைக் கூட திமுக அரசு கொண்டு வரவில்லை. நிலுவையில் உள்ள 14 ஆயிரம் மெகாவாட் திட்டங்களை செயல்படுத்தவில்லை.அரசு மின்உற்பத்தி ஆலைகளில் ஒரு யூனிட் மின்சாரம் 3.50 ரூபாய்தான்.ஆனால் தனியாரிடம் ரூ.9 முதல் ரூ.15 வரைக்கும் ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கினர்.தனியார் மின்உற்பத்தி ஆலைகளின் மூலம் கமிசன் அதிகம் கிடைத்ததால்,அரசின் மின்உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்ற விரும்பவில்லை.

கடந்த 4 ஆண்டுகளில் 56 விழுக்காடு மின்கட்டணம் உயர்த்தப்பட்டு ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மின்துறைக்கு வருமானம் வந்தும் நட்டத்தில் மின்வாரியம் இயங்குகிறது.மின்துறையில் நடந்த ஊழல்கள்தான் மின்பற்றாக்குறைக்குக் காரணம்.

தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையான மேகேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.2028 இல் தேர்தல் வருவதால் மேகேதாட்டு பணிகளை கர்நாடக முதல்வர் சிவக்குமார் வேகப்படுத்துவார்.தமிழகத்தில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர்

இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை மனுவோடு முதல்வரைச் சந்தித்த அன்புமணி,இந்த ஆட்சிக்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்திருக்கிறார் என்பதால் தவெக கூட்டணி அரசில் பாமகவும் இணையவிருக்கிறது என்கிற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

Leave a Response