
அதிமுக மீண்டும் பிளவுபட்டுள்ளது.இப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும்
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் உட்பட பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்களுடன், தலைமைச் செயலகத்தில்
பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரனை நேற்று சந்தித்தார்.
அப்போது,பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கி,தன்னைத்தான் பேரவை அதிமுக தலைவராக நியமிக்க வேண்டும் என்றும்,எஸ்.பி.வேலுமணி அளித்த கடித்தை ஏற்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து எடப்பாடி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகல் கூறப்படுவது முழுக்க முழுக்க அவதூறு. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறுவது அரசியல் இலாபத்திற்காகத் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்.திமுகவும் அதிமுகவும் என்றைக்கும் எதிர்க்கட்சிகளாகவே செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 4 ஆண்டுகால சிறப்பான ஆட்சியை நடத்தி மக்களின் பாராட்டைப் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 1.35 கோடி வாக்குகளைப் பெற்று, கூட்டணியுடன் 53 இடங்கள், தனித்து 47 இடங்களை வென்று கொடுத்தார்.
எடப்பாடிக்கு ஆதரவாக 26 எம்எல்ஏக்கள் கடிதம் வழங்கியுள்ளனர்.அந்த ஆதரவின் அடிப்படையில்தான் சட்டமன்ற கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 47 எம்எல்ஏக்கள் ‘எடப்பாடி பழனிச்சாமியே சட்டமன்றக் குழுத் தலைவர் எனக் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளது.பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து சி.வி.சண்முகம் பேசியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.கூட்டணி தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது.சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பேசும் கருத்துகளுக்கு பின்னால் அமைச்சர் பதவி ஆசை இருக்கிறது.
இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராகவே அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.அதனை மீறி யாரேனும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்,தூய்மையான ஆட்சி வழங்குவேன் என்று கூறி வரும் முதல்வர் விஜய்,சி.வி.சண்முகம் தரப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கமாட்டார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது…
அதிமுக பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க, பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்.அது தொடர்பாக அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இந்த
உத்தரவை மீறி வாக்களிப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
