234 தொகுதிகள் 4023 வேட்பாளர்கள் – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முழுவிவரம்

இன்று தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி,75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவை அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து வாக்களிக்க சவுக்குக் கட்டைகள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை இராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று மின்னணு வாக்கு எந்திரத்தைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு, தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அனைத்து மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் வகையில் துணை இராணுவ வீரர்களுடன் இணைந்து 1.4 இலட்சம் காவல்துறையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் அந்தந்த மாவட்டக் காவல்துறை, மாநகர ஆணையர்களுடன் இணைந்து 5 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இணைப்புடன் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் தலைமையில் 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 105 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அந்தந்த ஆய்வாளர்கள் தலைமையில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் காவல்துறையினர் சுழற்சி முறையில் தேர்தல் பணிகளில் ஈடுபட கூடுதல் ஆணையர் ஒருவர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 73 இலட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 80 இலட்சத்து 30 ஆயிரத்து 658 பேரும், பெண்கள் 2 கோடியே 93 இலட்சத்து 04 ஆயிரத்து 905 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 728 பேரும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் முதன்முதலாக 14,59,039 பேர் வாக்களிக்க உள்ளனர்.தேர்தல்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,காவலர்கள் என மொத்தம் 4,18,541 பேர் தபால் வாக்கு போட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு வாக்குப்பதிவுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 75,064 விவி-பேட் பயன்படுத்தப்பட உள்ளன.

தேர்தல் பணியில் 3,60,068 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.தேர்தல்பணிக்காக 300 கம்பெனி துணை இராணுவம் தமிழ்நாடு வந்துள்ளது. இதுதவிர 83,875 காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 5,949 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அதாவது துப்பாக்கி ஏந்திய துணை இராணுவ வீரர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டு, கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடப்பதற்காக 62 கவுண்டிங் சென்டர் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

2026 மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்ற பணம், நகை, பரிசுப் பொருட்கள் என இதுவரை ரூ.1,262 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பணமாக மட்டும் ரூ.543 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களில் சிறப்புவகை வாக்குச்சாவடிகள் பல்வேறு பிரிவினரை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 249 மாதிரி வாக்குப்பதிவு மையங்களும், பெண்களே நிர்வகிக்கும் வகையில் 325 மையங்கள், இளைஞர்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் 79 மையங்கள், மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் 71 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர சில மாவட்டங்களில் பசுமை வாக்காளர் மையம் அமைக்கும் முயற்சி நடக்கிறது. பொதுப் பார்வையாளர்கள் 136, காவல் பார்வையாளர்கள் 40, செலவினப் பார்வையாளர்கள் 150 என மொத்த பார்வையாளர்கள் 326 பேர் உள்ளனர். காவல்துறை ஊழியர்கள் 1,20,000 பேரும், அரசு ஊழியர்கள் 3,40,000 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார் சி-விஜில் மூலம் 5,634 வந்துள்ளது. இதில் 17 புகார் தவிர மற்ற புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால் சென்டரில் 74,217 புகார் வந்துள்ளது. அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணம் வழங்குவதாக புகார் வந்தது.அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூத்சிலிப் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 100 விழுக்காடு வாக்களிக்க அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்குச் செல்லும்போது பொதுமக்கள் கைபேசி கொண்டு செல்ல முடியாது. வாக்குப்பதிவு மையங்களில் கைபேசிகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்@ அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து, தயார் நிலையில் உள்ளது. இந்த முறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த வாக்குப்பதிவை எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் வாக்களிக்க தகுதி உள்ள அனைவரும் மறக்காமல் இன்று கட்டாயம் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். உங்கள் வாக்குரிமையை நிலைநாட்டுங்கள்.

வாக்குச் சாவடிக்குள் புகைப்படம் அல்லது காணொலி எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128 வாக்குப்பதிவு தொடர்பான இரகசியத்தன்மை கண்டிப்பாக பேணப்படுவதை உறுதி செய்கிறது. வாக்காளர்கள் அல்லது எந்தக்கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறினால் பிரிவு 128 இன் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒரு பிரத்யேக கண்காணிப்புப் பிரிவை அமைத்துள்ளது. இது சைபர் கிரைம் துறையுடன் இணைந்து சமூகஊடகங்களில் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றங்கள் ஆகியனவற்றை 4 விதமான கண்காணிப்பு மையங்கள் கொண்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response