
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது கூறியதாவது….
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது.புதிய கட்சிகள் இணைவதற்கும் வாய்ப்பு உள்ளது.ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு,அவர் வழி வந்தவர்கள் என்று சொல்பவர்கள்,தொண்டர்களெல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று கடந்த 7 ஆண்டுகளாக கூறிக்கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும்,அவர்கள் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவேண்டும்.தனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்காமல் கட்சி வெற்றிபெற வேண்டும் என நினைத்து ஒன்றிணைய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் முகத்திரை கிழிக்கப்படும்.
தற்போது, ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்டதால்,தோல்வி பயத்தில் உள்ள திமுக, மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் அளித்துள்ளது.இது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போன்றதாகும்.அவர்கள் மாதம் ரூ.1 இலட்சம் தருவதாகக் கூறினாலும்,திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி,மகளிர் உரிமைத் தொகைக்குச் செலவழிக்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன்.என்டிஏ ஆட்சி அமைந்தவுடன் பழங்குடி மக்கள் ஆதிதிராவிட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
பள்ளிகளிலேயே கஞ்சா பொட்டலங்கள் கிடைக்கும் அவலநிலையில் திமுக ஆட்சி உள்ளது.கூலிப்படைகள் அதிகரித்துள்ளன. போதைக் கலாசாரத்தால்,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளது.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்,ஓட்டுக்குப் பணம் கொடுத்து வென்றுவிடலாம் என திமுக நினைக்கிறது.வரும் தேர்தலுடன் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில்,ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு,அவர் வழி வந்தவர்கள் என்று சொல்பவர்கள்,தொண்டர்களெல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று கடந்த 7 ஆண்டுகளாக கூறிக்கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும்,அவர்கள் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவேண்டும்.தனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்காமல் கட்சி வெற்றி பெற வேண்டும் என நினைத்து ஒன்றிணைய வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் முகத்திரை கிழிக்கப்படும் என்று கூறியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
அவர்,சசிகலாவையும் ஓபிஎஸ்ஸையும் மனதில் வைத்தே இந்த மிரட்டலை விடுத்திருக்கிறார்.சசிகலாவால் அடையாளம் பெற்றவர் இப்போது அவரையே மிரட்டுகிறார்.இது மிகவும் வியப்பாக இருக்கிறது என்று பலரும் கூறிவருகின்றனர்.


