சசிகலா அதிரடி – எடப்பாடி அச்சம்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,அரசியல் களம் தினமும் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது.குறிப்பாக பாஜகவின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரைச் சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.பாஜகவின் கண்ணசைவுக்கேற்ப தமிழ்நாட்டையே அடகுவைக்கும் எடப்பாடி பழனிச்சாமி,இந்த ஒரு விசயத்தில் மட்டும் பாஜக சொல்பேச்சு கேட்காமல் உறுதியாக இருந்து வருகிறார்.

இதனால் எடப்பாடி பழனிச்சாமியை அரசியல் ரீதியாக வீழ்த்த சசிகலா புதிய வியூகம் வகுத்துள்ளதாகப் பேசப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தமது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் சசிகலா.அப்போது,கடந்த இரண்டு தேர்தல்கள் போல் இம்முறையும் ஒதுங்கியிருக்காமல் அதிமுகவை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் கூறியுள்ளார்.

பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிறைய விசயங்களை விட்டுக்கொடுத்தும் கட்சியின் ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவரவில்லை என்பதால் அடுத்தகட்டத்தை நோக்கி அவர் நகரவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதன்படி, தென்மாவட்டங்களில் எடப்பாடி அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக சமீபத்தில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜீவிதா நாச்சியாரை நிறுத்துவது, உசிலம்பட்டியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஐயப்பனை நிறுத்தி ஆதரித்து வேலை செய்வது அல்லது தானே (சசிகலா) அங்கு
போட்டியிடுவது என சசிகலா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

முறையாகத் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும், இது தொடர்பான முடிவை சசிகலா வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தகவல்களால், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response