
சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று பேராசிரியர் ச.ராஜநாயகம் எழுதியுள்ள ‘இடக்கரடக்கல்’ நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீமான் பேசியவது….
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களின் சிந்தனையில்தான் உள்ளது. தற்போது அரசியல் பெரும் இலாபமீட்டும் தொழிலாக மாறிவிட்டது.தொகுதிக்கு ரூ.20 கோடி முதலீடு செய்து, ரூ.150 கோடி வருவாய் ஈட்டலாம் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வருகின்றனர்.
மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று கருதுவோர், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம், மடிக்கணினி போன்றவற்றை வழங்குகின்றனர்.
தற்போது மக்கள் நலனுக்காக திட்டம் தீட்டும் ஆட்சியாளர்கள் இல்லை. இதைத் தகர்த்து, மக்கள் அரசியலை கொண்டுவர முயற்சிக்கிறோம். எங்கள் கோட்பாடு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. ஆட்சி முறை மாற்றம். என்னையும் ஒரு நாள் மக்கள் தேர்வு செய்வார்கள். அதற்கேற்ப, மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது….
திமுக ஆட்சியில் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போது ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி கூறுகிறார். இதனால் ரூ.10 இலட்சம் கோடியாக இருக்கும் தமிழ்நாட்டின் கடன், ரூ.15 இலட்சம் கோடியாக உயரும். இலவசப் பேருந்து வேண்டும் என்று யார் கேட்டது? ஏற்கெனவே போக்குவரத்துத் துறை ரூ.1 இலட்சம் கோடி இழப்பில் சென்று கொண்டிருக்கும்போது, இதற்கான பணம் எங்கிருந்து வரும்? இவையெல்லாம் நல்ல நலத் திட்டங்கள் அல்ல. நட்டங்கள்.
2 விழுக்காடு வாக்குகள் வைத்திருப்பவர்களுக்கே கூட்டணிக்கான அழைப்புகள் வரும்போது, எனக்கு வராமல் இருக்குமா? கூட்டணி வைத்ததால்தான் தேமுதிகவின் வாக்குகள் குறைந்து விட்டன. நான் வாக்குகளை இழக்கத் தயாராக இல்லை
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


