
தமிழ்நாட்டில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.தமிழ்நாட்டின் பண்பாட்டு விழாவான இதுமட்டுமே ஒட்டுமொத்தத் தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் பெரும் விழா.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தமிழீழத்திலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டும். உலகம் முழுக்க வாழும் தமிழர்க்ள் எல்லோரும் கொண்டாடும் விழாவும் இதுதான்.
கடந்த சில ஆண்டுகளாக, தைப்பொங்கலை முன்னிட்டு அண்டை மாநிலமான கேரளாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில வருடங்களாக பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வருடமும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் தை முதல்நாள் (சனவரி 15 ஆம் தேதி) அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலுள்ள, திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


